பூந்தமல்லி, செப்.4: மதுரவாயல், திருவேற்காடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 30 சவரன் நகை, பைக், லேப்டாப் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் குமரன் (42). இவரது மனைவி கவிதா. குமரன் மினி லோடு வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில், அவர் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் மாலை வேலைக்குச் சென்று விட்டார். பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர கவிதாவும் வெளியே சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு கவிதா அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 15 சவரன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு, ₹6,000 ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது உணவு டெலிவரி செய்வது போல் வரும் மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும், பின்னர் நகை, பணத்தை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து அவரைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம் : திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், ஈடன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரோ பிரின்ஸ் ஜெரால்டு (35). இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் கிரேஸ். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் தம்பதியர் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில், வீட்டின் ஒரு அறையில் மின் விளக்குகள் எரிவதைப் பார்த்து ஆண்ட்ரோ பிரின்ஸ் ஜெரால்டு எழுந்து வந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்ட்ரோ பிரின்ஸ் ஜெரால்டு வெளியே வர முடியாத நிலையில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வந்து கதவை திறந்து விட்டனர். அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 15 பவுன் நகைகள், லேப்டாப், பைக் மற்றும் கார் சாவி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவேற்காடு போலீசில் ஜெரால்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.