சிவகங்கை, ஆக.20: சிவகங்கை மாவட்டத்தில் உணவு பொருள் விற்பனை கடைகள் அனைத்தும் லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் ஹோட்டல்கள், மளிகை, பேக்கரி, இறைச்சி, டீ, பால் கடைகள், சாலையோர உணவு வியாபாரிகள், உணவுப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட உணவு வணிகர்கள் லைசென்ஸ் பெற வேண்டும்.
வணிகர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானங்கள், போன்றவற்றிற்கும் உணவுப் பாதுகாப்பு லைசென்ஸ் பெறுவது அவசியமாகும். உணவுப் பாதுகாப்புத் துறையின் லைசென்ஸ் பதிவு பெற உணவுப் பாதுகாப்புத் துறையை மட்டுமே அணுக வேண்டும். இடைத்தரகர்களை அணுக வேண்டாம். மேலும், உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.