உடுமலை, ஜூன் 23: உடுமலை அருகே உள்ள தும்பலப்பட்டி வழியாக பழனி, ஆனைமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தளி, ஜல்லிப்பட்டி, குறிச்சிக்கோட்டை, குமரலிங்கம், கொழுமம், மடத்துக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தும்பலபட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இது பற்றி கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்தனர். தண்ணீர் தேங்கிய இடத்தில் மண் போட்டு மூடியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.