உடுமலை, ஆக. 24: உடுமலை, பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் மண்ணில் மறையும் நெடுங்கற்களை கண்டறிந்து உலகுக்கு காட்டி வரும் வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு சரித்திர ஆர்வலர்கள் இடையே வெகுவாக பாராட்டு குவிந்து வருகிறது. உடுமலை அருகே சேரர், சோழர் காலத்தில் போரில் இறக்கும் இனக்குழு தலைவன் நினைவாக நெடுங்கற்கள் மண்ணில் சிதிலமடைந்து அழிந்து வருவது வரலாற்று ஆய்வாளர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அருள்செல்வன், தலைவர் குமாரராஜா ஆகியோர் இதனை கண்டறிந்து, இதன் வரலாற்று சிறப்புகளையும், தொன்மைகளையுல் உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து இவர்களது தன்னலமற்ற சரித்திர பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் வீரத்தையும், தொன்மையையும் உணர்த்தும் பழமையான நெடுங்கற்கள் குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அருள்செல்வன், தலைவர் குமாரராஜா ஆகியோர் மேலும் கூறியதாவது: நடுகற்கள் என்பது போரில் இறக்கும் வீரர் நினைவாக வைக்கப்படும் 3, 5 அடி உயரம் உடையவை. இவற்றில் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும். சிறிய உயரத்தில் இருக்கும். கிளை வழிபாட்டின் அடையாளம். ஆனால் நெடுங்கல் என்பது சுமார் 30 அடி உயரம் உடையவை. தரைக்கு கீழும் 15 அடி வரை கற்கள் காணப்படும். 11, 12ம் நூற்றாண்டில் சேரர், சோழர் காலத்தில் போரில் இறக்கும் இனக்குழு தலைவன் நினைவாக நெடுங்கற்கள் வைக்கப்பட்டது. இந்த நெடுங்கற்கள் உடுமலை அருகே கொங்கல் நகரம் பகுதியிலும், பொள்ளாச்சி பகுதியிலும் தற்போது 3,4 என்கிற எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. காலப்போக்கில் நவீன மாற்றத்திலும், நகர மயம், விரிவாக்க பணிகளாலும், மக்கள் அறியாமையாலும் ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்தும், அப்புறப்படுத்தியும் மண்ணோடு மண்ணாக மறைந்து விட்டது.
உடுமலை அருகே கண்ணாடிப்புத்தூர் கடந்த காலங்களில் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் எனப் புகழ்பெற்ற ஊர். இங்கு 11, 12-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட திருநந்தீஸ்வரர், திருக்கைலாய நாதர் கோயில்களில் ஏராளமான கல்வெட்டுகள் நிலதானம், இறையிலி நிலங்கள் சார்ந்தும் கல்வெட்டு பதிவுகள் இருக்கின்றன. அதற்கு முன்பே சேரனை வென்ற சோழன் பெருவெளி என்றும் சோழ மாதேவி பெருவழி, வீர நாராயண பெருவழி என்றும் பெருவழி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன. இது மட்டுமின்றி கண்ணாடிப்புத்தூர் நீலம்பூர் பகுதியில் ஈராயிரம் காலத்திற்கும் முற்பட்ட கற்திட்டை இந்த பகுதி மிகுந்த தொல் பழங்காலமான பகுதி என்று உறுதி பட உரைக்கிறது. இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் கண்ணாடிப்புத்தூரில் 10 அடிக்கும் உயரமான நெடுங்கல் இருந்ததையும் தற்போது அது மறைந்து வருவதையும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கடந்த காலங்களில் ‘மாப்பிள்ளைக்கல்’ எனவும், தாய் மாமன் மணமகளை கல்லில் அமர்த்தி தனது தோளில் தூக்கிச்சென்றதையும் கூறுகின்றனர். மேலும், இந்த நெடுங்கல்லுக்கு ‘கிடாய்’ வெட்டியதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் சுமார் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் கூறுகையில், பத்தடிக்கு உயரமான நெடுங்கல் இருந்ததை தாம் பார்த்ததாகவும் காலப்போக்கில் ஊரின் வளர்ச்சியில் சாலைப்பகுதி உயர்ந்து நெடுங்கல்லின் உயரம் குறைந்து வருவதாகவும் சொல்கின்றனர். இருப்பினும் இந்த நெடுங்கல்லை தம்முடைய ஊரின் அடையாள சின்னமாக பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு நிர்வாகிகள் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அருள்செல்வன், தலைவர் குமாரராஜா தெரிவித்தனர்.
இந்நிலையில், கரைவழி நாட்டில் இருக்கும் கல்வெட்டுகள், தொல் பழங்கால சின்னங்களை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து கரை வழி நாடு எனும் பெயரில் ஆவணப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், உடுமலை, பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் மண்ணில் மறையும் நெடுங்கற்களை கண்டறிந்து உலகுக்கு அதன் பழமையை தொடர்ந்து உணர்த்தி வரும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கும், நிர்வாகிகளுக்கும் சரித்திர ஆர்வலர்களிடம் வெகுவாக பாராட்டு குவிந்து வருகிறது.