உடுமலை, செப். 20: உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பொள்ளாச்சி மற்றும் கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்துவருகின்றனர். மாணவர்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து செல்வதற்காக காலை 8 மணியளவில் பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். ஆனால், அந்த நேரத்தில் உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கோவைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புறப்படுவதில்லை. அனைத்து பேருந்துகளும் பழனியில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் வருகின்றன.
ஏற்கனவே இருக்கைகள் நிரம்ப கூட்டமாக வருவதால், உடுமலையில் காத்திருக்கும் மாணவர்கள் இடம் கிடைக்காமல் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மாணவிகள் பாடு மிகவும் திண்டாட்டமாகி விடுகிறது. நெரிசல் காரணமாக பேருந்துகளை தவறவிட்டால், அடுத்த பேருந்துக்காக காத்திருந்து உரிய நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மாலையில் திரும்பிவரும்போதும் இதே நிலைமைதான் உள்ளது. எனவே, உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கோவைக்கு புறப்படும் வகையில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.