தஞ்சாவூர், பிப்.26: தமிழ்ப் பல்கலைக்கழகச் சமூக அறிவியல் துறை சார்பில் உடல் நலம் காக்க உன்னத பயணம்\” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் பாரதஜோதி தலைமை வகித்து பேசும்போது, நாம் மனஅழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனஅழுத்தம் ஏற்படும்போது மனவிட்டு பேசி அதற்கு தீர்வுக் காண வேண்டும் என்றார். பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் பேசுகையில், உடல் நலம் எவ்வாறு பேணிக் காக்கவேண்டும் மற்றும் எவ்வாறு காக்க வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் குறிஞ்சி வேந்தன் பேசும்போது,ஆரோக்கியத்திற்கு பயன்படும் சித்த மருத்துவத்தை பற்றி விளக்கினார். தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் உஷா நந்தினி, தஞ்சாவூர் இன்னர்வீல் சங்க தலைவர் ரேகா குபேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் மாரிமுத்து பேசும்போது, புற்றுநோய் எவ்வாறு வருகிறது. அதற்கு எந்த முறையில் சிகிச்சை பெற வேண்டும். புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது என்பதையும், உடலில் ஏதாவது மாற்றம் ஏற்படும்போது அதனை மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
புற்றுநோய் முறையாக சிகிச்சை பெற்றால் விரைவில் குணப்படுத்திவிடலாம் என்று தனது உரையில் கூறினார். கருத்தரங்கில் 117 மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவல்நிலைப் பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முன்னதாக, தலைவர் சங்கீதா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் அறிவானந்தம் நன்றி கூறினார்.