Wednesday, February 12, 2025
Home » உடலை வளர்த்து உயிரை வளர்ப்போம்!

உடலை வளர்த்து உயிரை வளர்ப்போம்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் பிரபஞ்சத்தில் மானிடராக பிறத்தல் என்பதே மிக அரிது. ஏனென்றால் பூமியில் வாழும் விலங்கினங்களில் மனித இனமே சிறந்தது. மனிதனுக்குத்தான் சிந்திக்கக்கூடிய, ஆராய்ச்சிக்குரிய புத்திக்கூர்மை, பேச்சு, தைரியம், நல்லது எது கெட்டது எது பகுத்தறியக்கூடிய தன்மை போன்ற சிறப்புக்களைக் கொண்டது மனித இனம். அதனால்தான் ‘மானிடராதல் அரிது’ என்று ஒளவை பாட்டி கூறினார். மானிடராக பிறந்த பின்பு நாம் எப்படி பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த காயத்தை (உடலை) எவ்வாறு பேணிக்காக்கிறோம் என்பதை பொறுத்தே சிந்தனையும், ஆரோக்கியமும் அமையும். Life is a Race என்று ஓடிக் கொண்டேயிருக்கிறோம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நமது உடல்… நமது ஆரோக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நேரம் ஒதுக்கி, அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழ் மனதில் இருந்து ஆரோக்கியமே முக்கியம், அதுவே எனது தலையாய வேலை என்ற எண்ணம் ஆழமாக வேண்டும். அப்போதுதான் உடம்பை பேணிக்காத்து உயிரை நிலை நிறுத்த முடியும். ஆயுர்வேத மருத்துவம் பல்வேறு வழிமுறைகளில் நாம் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியம் சம்பந்தமான பல கடமைகளைக் கூறியுள்ளன. ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு வேலையிருந்தாலும் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதே முக்கிய வேலை’ என்கிறது ஆயுர்வேதம். அதாவது எவ்வளவு வேலையிருந்தாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உடலின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கோண்டே வேலைகளைச் செய்ய வேண்டும். எந்த வேலையிலும்/வேளையிலும் ஆரோக்கியமே மையக்கருத்தாக முதன்மையாக இருக்க வேண்டும். ஆனால், நாம் இன்று எப்படி இருக்கிறோம்? இயந்திர கதியான வாழ்க்கை. இலக்கை எட்ட வேண்டும் துரிதமான செயல்பாடு, சம்பாதிக்க வேண்டும் என்று சரியான வேளையில் சரியான அளவில் உணவை எடுத்துக் கொள்ளாமை, உடலைப் பராமரிப்பதற்கு என நேரம் ஒதுக்காமை என பல தவறுகளைச் செய்கிறோம். ஏனெனில் உடலும், உயிரும் பிரிக்க முடியாத நட்பை கொண்டுள்ளது. உடம்பில் உயிர் நிலைத்து இருக்க உடலின் ஆரோக்கியம் அவசியம். நோய் முதலான காரணங்களால் உடம்பு அழியுமாயின் உயிரும் அழியும். அவ்வாறு அழிந்தால் மெய்யறிவை அடைய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பை வளர்த்தேன். அதனால் உயிரை அழிவிலிருந்து காத்தேன் என்கிறார் திருமூலர்.மனித இனத்திற்கு நோய் வராமல் தடுத்து, நோய் வந்தாலும் அவற்றை குணமாக்கி மீண்டும் ஏற்படா வண்ணம் செய்யும் ஒரு முழுமையான மருத்துவமுறை ஆயுர்வேதம். ஒரு மனிதன் எப்படி எல்லாம் வாழ வேண்டும், காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை கருத்தரிப்பு பிரசவம் தொடங்கி ஆரோக்கியத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முழுமையாக விளக்கியிருக்கிறது.வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் ஓரு வேலை செய்ய வேண்டும். அதே சமயம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வேண்டும். இந்த சூழலை எப்படி கையாளலாம் என்பதற்கு ஆயுர்வேதம் சொல்லும் எளிய வழிகள் இவை…* நமது ஒவ்வொரு உடல் உறுப்புகளில் அக்கறை செலுத்த வேண்டும். எந்த உறுப்புகளிலும் சிறிது அச்சம் தோன்றினாலோ உடனே கவனிக்க வேண்டும்.* எந்த வேலையாக இருந்தாலும், இயற்கையாக உடலில் ஏற்படும் வேகங்களை எக்காரணத்தைக் கொண்டும் தடுத்து நிறுத்தக்கூடாது.* தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.* அஜீரணம் இருக்கும்போதும் பசிக்காதபோதும் வேறு உணவு உட்கொள்ளக்கூடாது.* காலை வேளை உணவைத் தவறாது எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய; உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகாத உணவை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.* உழைப்புக்கு ஏற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் உழைப்பில் அதிகளவில் ஈடுபடுபவர்கள் அதிக சக்தி கொடுக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.* உடலுக்குத் தேவையான தண்ணீர் பருக வேண்டும்.* கட்டாயம் இரவில் 6-8 மணி நேரம் உறங்க வேண்டும்.* காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு தூக்கத்திலிருந்து எழும்பிவிட வேண்டும்.* மன உளைச்சல், கோபம், பொறாமை, அதிக சிந்தனை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு வாழ்தல் போன்றவைகள் கூடாது.* எந்த பிரச்னைகளாக துக்கங்களாக இருந்தாலும், மனவலிமை அதிகப்படுத்திக்கொண்டு தைரியமாக வாழ வேண்டும்.* வயதிற்கும், பருவ காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தேற்றிக்கொள்ள வேண்டும்.* மது, மாது, புகை, போதை வஸ்துகளுக்கு அடிமையாகக் கூடாது.* நம்பிக்கையுள்ள இறை பணியில் தூய மனதுடன் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். * உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.* வாரம் ஒருவேளை உண்ணா நோன்பும், ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பாதிப்படைந்த உடல் உறுப்புகளைத்தானே சீர் செய்துகொள்ள உதவும்.மேலும் உடலில் உயிர் இருக்கும் 10 இடங்களை ஆயுர்வேதம் கூறுகிறது. நெஞ்சு, பொட்டுகள், தலை, இதயம், சிறுநீரகம், கழுத்து, ரத்தம், விந்து, ஓஜஸ்(தாதுக்களின் சாரம் இதுவே உயிர்சக்தி), ஆசனவாய். மேற்கண்ட உறுப்புகளை அதிக அளவில் கவனத்தில் கொண்டு சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே கவனித்து உடலையும், உயிரையும் பேணிக்காப்போம்.– விஜயகுமார்

You may also like

Leave a Comment

8 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi