நன்றி குங்குமம் டாக்டர்உடலில் அடிபடுவதால் வீக்கம் ஏற்படுவது இயல்பான விஷயம்தான். ஆனால், சில நேரங்களில் காரணம் தெரியாமலேயே வீக்கம் ஏற்படுவது உண்டு. அந்த இடம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அங்கே அழுத்திப் பார்த்தால் ஒரு பள்ளமும் விழும். மறுபடி அந்த பள்ளம் சரியாக, உடல்பகுதி இயல்பாக சில நொடிகள் தேவைப்படும். இதனையே மருத்துவர்கள் நீர்க்கோர்வை என்கிறார்கள். இந்த நீர்க்கோர்வையானது ஏன் ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன?; விரிவாக எடுத்துரைக்கிறார் பொது மருத்துவர் சங்கர்.ரத்தத்தில் இருக்க வேண்டிய, தேவையான அளவு நீர்ச்சத்து அளவுக்கதிகமாகி பின் ரத்த நாளங்களில் இருந்து அந்த நீரானது கசிந்து திசுக்களில் சென்று தேக்கமடைந்து விடுவதால் உடம்பில் நீர்க்கோர்வை ஏற்படும். இந்த நீரானது மறுபடி ரத்தத்தில் சென்று சேராது. உடலில் ஏற்படும் இந்த நீர் தேக்கத்தைத்தான் நீர்க்கோர்வை (Edema or Oedema) என்கிறோம். உடலில் எங்கு வேண்டுமானாலும் நீர்க்கோர்வை ஏற்படலாம். பெரும்பாலும் கால்களில் அதிகமாக இருக்கும். நீர்க்கோர்வையானது சிறு சிறு பிரச்னைகள் துவங்கி பெரிய அளவிலான பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கும்.; பொதுவாக நீர்க்கோர்வையானது ஒவ்வாமை, ரத்தசோகை, வைட்டமின் குறைபாடு போன்ற பல காரணங்கள் மற்றும் உறுப்புகளில் ஏற்படும் கடும் பாதிப்புகளினாலும் ஏற்படும். அவற்றைக் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.சிறு விபத்துகள் சிறு சிறு விபத்துகளினால் ஏற்படும் நீர்க்கோர்வை, காயம் சரியாகும்போது உடனடியாக சரியாகிவிடும்.; ஒவ்வாமை உடலில் ஒவ்வாமையின் அளவு அதிகரிக்கும் போது நீர்க்கோர்வை ஏற்படலாம். ஒவ்வாமைக்கான காரணங்கள்* பூக்களின் மகரந்தம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.* பூச்சிக்கடி (பாம்பு, தேள், பூரான் போன்ற பலவிதமான பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படும்.)* மீன், இறால் போன்ற சில உணவுப்பொருட்களால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.* மருத்துவருக்கு தெரியாமல் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலோ அல்லது மருத்துவர் பரிந்துரை செய்யும் நமக்கு ஒத்து வராத சில மருந்துகளாலோ ஒவ்வாமை ஏற்படலாம்.* அழகு சாதனப் பொருட்களால் (Ex. முகத்துக்கான க்ரீம்கள்) மற்றும் ரசாயனப் பொருட்களால் (Ex. துணி சோப்) சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.ஒவ்வாமைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை சரி செய்யும்போது ஒவ்வாமையினால் ஏற்படும் நீர்க்கோர்வை சரியாகி விடும். ரத்த சோகை;ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக காரணமாக இருப்பது இரும்புச்சத்து அதிகமுள்ள புரதமான ஹீமோகுளோபின். அதுதான் சிவப்பணுக்களுக்கு அந்த சிவப்பு நிறத்தை அளிக்கிறது. நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு செல்லவும், மற்ற பாகங்களில் இருந்து கார்பன் – டை ஆக்ஸைடை நுரையீரலுக்கு கொண்டு செல்லவும் ரத்த சிவப்பணுக்களை செயல்படுத்துவது ஹீமோகுளோபின் தான். அந்த ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்த சோகை ஏற்படுகிறது.தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாட்டின் காரணமாக ரத்தசோகை ஏற்படும். ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர்த்து ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும்போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. ரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகளால் (குடற்புழுக்கள்) ரத்த சோகை ஏற்படும். ரத்தப் போக்கை ஏற்படுத்தும் மாதவிடாயானது பெண்களுக்கு; ரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலங்களில் இரண்டு உயிருக்குத் தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதபோது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. லுகேமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக ரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். நம் உடலில் தேவையான அளவு ரத்த சிவப்பணுக்கள் உருவாகாதபோது ரத்தசோகை ஏற்படுகிறது.; ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும்போது ரத்தசோகை பிரச்னை ஏற்படும். இவ்வாறு இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படும் ரத்த சோகையை இரும்புச்சத்துள்ள மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும்போது சரிசெய்து விட முடியும். ரத்த சோகையை தீர்க்கும் தேவையான அளவு ஊட்டச்சத்தினை உணவில் இருந்து பெற முடியாதபோது மருத்துவரிடம் சென்று இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. ரத்த சோகை சரியாகும்போது இயல்பாகவே நீர்க்கோர்வையும் சரியாகிவிடும். புரதச்சத்து குறைபாடுஅல்புமின் என்னும் ஒருவகை புரதம் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேற உதவும். இந்த புரதம் குறையும்போது திசுக்களில் நீர் தேங்கிவிடும். ஊட்டச்சத்து குறைபாடு வைட்டமின் பி 1 குறைபாட்டினால் பெரிபெரி நோய் ஏற்படலாம். இதனாலும் நீர்க்கோர்வை ஏற்படும். பி1 வைட்டமின் அதிகமுள்ள உணவுகள் மற்றும் பி 1 வைட்டமின் மாத்திரை மருந்துகளை உட்கொள்ளும்போது நீர்க்கோர்வை சரியாகும்.; ரத்த வகையை மாற்றி உடலுக்குள் செலுத்துவதனால் குறிப்பிட்ட ரத்த வகைக்குப் பதிலாக தவறான ரத்த வகையை ஒருவருக்கு உடலில் செலுத்தி விட்டால் அது உயிருக்கே பிரச்னையாகலாம். அதனால் உடல் இந்த ரத்த வகையினை ஏற்றுக்கொள்ளாததன் அறிகுறியாக நீர்க்கோர்வை ஏற்படும். இதற்கு உயிர் காக்கும் மருந்துகளுடன் சரியான வகை ரத்த ஏற்றி இந்நிலைமையை சரி செய்வார்கள். அப்போது நீர்க்கோர்வை சரியாகிவிடும். இதய பாதிப்புஅதிக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நோய்த்தொற்று(வைரஸ் அல்லது பாக்டீரியல்) மாரடைப்பு, இதய பலவீனம், ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் இதய பாதிப்பு, இதயத்தில் ஓட்டை, இதய வால்வில் பழுது போன்ற பல விதமான காரணங்களால் இதயம் செயலிழக்கலாம். இதய பாதிப்பின் காரணமாக ரத்த ஓட்டம் தடைபடும். அப்போது உடலில் நீர் தேங்க ஆரம்பித்துவிடும். இதனால் முகம், கை, கால் என உடலில் எங்கு வேண்டுமானாலும் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படலாம். இதய பாதிப்பு சரியாகும்போது இப்பிரச்னை சரியாகி விடும். கல்லீரல் பாதிப்புகல்லீரலில் ஏற்படும் வீக்கம் அல்லது கல்லீரல் சுருக்கம்(Cirrhosis) போன்றவை கல்லீரலில் ஏற்படலாம். இவற்றை கல்லீரல் பாதிப்பு என்கிறோம். தொடர்ந்து ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்களுக்கு, நோய்த் தொற்றுகளால் (வைரஸ் அல்லது பாக்டீரியல்) பாதிக்கப்பட்டவர்களுக்கு, பித்தப்பைக் கல் அடைப்புக்கான சரியான சிகிச்சை இன்மை அல்லது காலங்கடந்த சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு கல்லீரல் வீக்கம் ஏற்படும். புற்றுநோய்க் கட்டிகள், விஷம் (விஷம் உட்கொண்டவர்கள் அல்லது விஷக்கடியால் பாதிப்புக்குள்ளானவர்கள்) அதிகக் கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். கல்லீரல் ஆரம்ப கட்ட பிரச்னைகளின் போது தானாகவே தன்னை சரி செய்து கொள்ளும். தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும்போது கல்லீரல் செயலிழக்கும். கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப கட்டங்களில் இந்த நீர்க்கோர்வை இருக்காது. கல்லீரல் சுமாராக பாதி அளவிலோ அல்லது முழுமையான பாதிப்பு அடையும்போது தான் நீர்க்கோர்வை ஏற்படும். கல்லீரல் செயல்பட முடியாத நிலைமையில் உடலில் நீர் தேங்கும்.சிறுநீரகப் பாதிப்புஅதீத ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நோய்த்தொற்று, Nephrotic Syndrome, தொடர்ந்து உட்கொள்ளும் வலி மாத்திரைகள், சீறுநீரகத்தில் அல்லது சிறுநீரகக் குழாயில் ஏற்படும் கல் அடைப்பு போன்றவற்றின் காரணமாக சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகப் பாதிப்பின் காரணமாக நச்சுப்பொருட்களான யூரியா மற்றும் க்ரியாட்டீனின் வெளியேறாமல் போவதால் அவற்றின் அளவு உடலில் அதிகமாகி அது ரத்தத்தில் கலந்துவிடும். இவ்வாறு கலப்பதனால் ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் சேர்வதால் நீர்க்கோர்வை பிரச்னை ஏற்படும். ஆரம்பக்கட்டத்தில் துவங்கி சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்படும் வரை இந்த அறிகுறி காணப்படும். (Nephrotic Syndrome – சரியான புரதச்சத்து உட்கொள்ளாதவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு புரதச்சத்துக் குறைபாடு (Kwashiorkor) ஏற்படும். அதனால் தோலில் ஏற்படும் சொரி, சிரங்கு போன்றவற்றில் இருந்து சீழ் உருவாகி அந்த நோய்த் தொற்றின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்.) சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் அதற்கு தற்காலிக சிகிச்சையாக டயாலிசிஸ் செய்வார்கள். அதாவது டயாலிசிஸ் என்ற கருவி மூலம் அதிக அளவில் இருக்கும் நச்சுக்கலந்த ரத்தத்தை பிரித்தெடுப்பார்கள். ஆனால், இதனையும் நெடுநாட்கள் மேற்கொள்ள முடியாது. தொடர்ந்து டயாலிசிஸ் செய்து கொள்ளும்போது உடலில் பொட்டாசியம் போன்ற சத்துக்களின் அளவு குறையும். நோய்த் தொற்றும் ஏற்படலாம். டயாலிசிஸ் மேற்கொள்ள முடியாத நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது அத்தனை சுலபமானதல்ல. சிறுநீரக தானம் அளிப்பவரின் ரத்தம் மற்றும் திசுக்கள் பாதிக்கப்பட்டவருக்கு சரியாக பொருந்த வேண்டும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பின் அதனை பாதிக்கப்பட்டவரின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஏற்றுக்கொண்டவரின் உடல் பெறப்பட்ட சிறுநீரகத்தை எந்த ஒரு காரணத்திற்காகவும் நிராகரிக்காமல் இருப்பதற்காக சாப்பாட்டில் உப்பை குறைத்துக்கொள்ளுதல் போன்ற சில முக்கியமான விஷயங்களில் கவனமாக இருப்பதுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுதும் சில மாத்திரைகளை (விலை அதிகமாக இருக்கும்) உட்கொள்ள வேண்டி இருக்கும்.கொடுக்கப்பட்ட சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் இயல்பாக அந்த நச்சுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறி நீர்க்கோர்வை சரியாகும். எனவே நீர்க்கோர்வை என்பதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் நீர்க்கோர்வை ஏற்பட்ட உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும்.தைராய்டு பாதிப்புதைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதி யில் வண்ணத்துப் பூச்சியின் வடிவத்தில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. இந்த ஹார்மோன் நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு (மெட்டபாலிசம்) அடிப்படையானது. நம் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று. இது பிட்யூட்டரி சுரப்பியினால் கட்டுப்படுத்தப்படுகிறது. தைராய்டு சுரப்புக் குறைவாக இருப்பது ஹைப்போ தைராய்டிஸம் (Hypo thyroidism). அயோடின் குறைபாடு, தைராய்டு கேன்சர், தைராய்டு முடிச்சுகள் போன்ற பல காரணங்களால் ஹைப்போ தைராய்டிஸம் ஏற்படலாம்.ஹைப்போ தைராய்டிஸம் அதிகமாகும்போது அதனை Myxedema என்கிறோம். இந்த சமயத்தில் உடலில் உள்ள நீரில் கெட்ட கொழுப்புச் சேர்ந்து நீரின் அடர்த்தி அதிகமாகும். இதனால் உடலில் நீர்க்கோர்வை ஏற்படும். எனவே சிலருக்கு முகம், வயிறு என ஊதிப்போய் இருக்கும். தேவையான தைராய்டு சுரப்பு அதிகரிக்க மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அல்லது அதற்கு தேவையான மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது தைராய்டு சுரப்பு இயல்பு நிலைக்கு வந்து இந்த நீர் கோர்த்துக் கொள்ளுதல் சரியாகிவிடும்.மூளை பாதிப்புநம் உடலின் தலைமை சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கோளாறுகள்(ACTH), மூளைக்கட்டிகள், தலையில் அடிபடுதல், நோய்த் தொற்று இது போன்ற பல காரணங்களால் மூளை பாதிக்கப்படும்போதும் நீர்க்கோர்வை ஏற்படலாம்.; கீழ்க்கண்ட பிரச்னைகளை சரி செய்தால் இந்த நீர்க்கோர்வை தானாக குறையும். சிரை அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புரத்தத்தினை ஏந்திச் செல்லும் இந்த குருதி குழல்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் உறைந்து போனாலோ, ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டாலோ பாதிக்கப்பட்ட இடத்திற்குக் கீழ் உள்ள பகுதிகளில் நீர்க்கோர்வை பிரச்னை ஏற்படும். நிணநீர் பாதிப்புநம் உடலில் இருக்கும் நிண நீரின் ஓட்டம் தடைபடும்போது அந்த இடத்தில் நிணநீர் தேங்கி விடும். இதனை Lymphoedema என்கிறோம். இதனால் நீர்க்கோர்வை பிரச்னை ஏற்படும். உதாரணமாக சாக்கடை போன்ற இடங்களில் உற்பத்தியாகும் Culex என்கிற கொசு கடிப்பதால் உடலுக்குள் பைலேரியா என்கிற கிருமி உட்சென்றுவிடும். உடலில் தங்கி விடும் அந்த கிருமி நிணநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இவ்வாறு நிணநீர் ஓட்டம் தடைபடுவதால் அந்த நிணநீர் அங்கேயே தங்கிவிடும். அதை அப்படியே விட்டுவிடும்போது அந்த நீரானது கல் மாதிரி இறுகிப்போகும். மென்மைத்தன்மையிலிருந்து கடினப்பட்டுவிடும். அதைத்தான் யானைக்கால் வியாதி என்கிறோம். இவ்வாறு பாதிக்கப்பட்ட பின்னர் கால்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம். ஆனால், ஆரம்பக்கட்டத்திலே நிணநீர் தேக்கத்திற்கு உரிய சிகிச்சை, ஆன்டிபயாட்டிக் மருந்துகள், நம் உடலிலிருந்து அந்த கிருமியை விரட்டி அழிக்கும் மருந்துகள் அழுத்தமான எலாஸ்டிக் பேண்டேஜ் போன்றவற்றின் மூலம் சரிசெய்யலாம்.கர்ப்ப காலம்கர்ப்பத்தின்போது உடல் எடை கூடுவதால் கால் நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். இதனால் நீர்க்கோர்வை ஏற்படும். இது இயற்கையான ஒன்று. அழுத்தம் குறையும்போது இயல்பாக சரியாகி விடும் மற்றும் உடலில் எந்த ஓர் உறுப்பிலும் உண்டாகும் கடைசிக்கட்ட புற்றுநோய்க் கட்டியானது மற்ற உறுப்புக்கும் பரவும்போது நீர்க்கோர்வை பிரச்னை ஏற்படும். அதனால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்படுவதை சுலபமாக நினைக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம்.– சக்தி
உடலில் நீர் கோர்த்துக் கொள்வது ஏன்?
previous post