மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகள் மதுரையில் நேற்று வழங்கப்பட்டன.
இதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 33 உடற்கல்வி ஆசிரியர், 10 தையல் ஆசிரியர் மற்றும் 2 இசை ஆசிரியர் ஆகிய 45 பேருக்கு பணி நியமன கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டது.
இதன்படி 45 உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 தட்டச்சர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர்) முனைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.