உடன்குடி, ஜூலை 23: உடன்குடி அனல் மின்நிலையம் அருகே தோட்டத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்றதால் 5 மணி நேரம் மரங்கள் பற்றி எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் இப்பகுதி கடல் நீர்மட்டத்தை விட தாழ்வாக உள்ளதால் கடல் நீர்மட்டத்தை விட அனல் மின் நிலைய வளாகத்தை உயர்த்த உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் இரவு, பகலாக மணலை கொண்டுவந்து நிரப்பி வந்தனர்.இதனிடையே அனல் மின்நிலையம் வளாகம் அமைந்திருக்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளதால் மழைக்காலங்களில் ஏற்படும் நீர்க்கசிவால் தண்ணீர் நாட்கணக்கில் தேங்கிநிற்பதால் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகளில் கடும் சுணக்கம் நிலவுகிறது. மேலும் அனல் நிலையத்தையொட்டி அருகே ஆயிரக்கணக்கான ஏக்கரில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள மணலை அனுமதியின்றி லாரிகள் அள்ளிச்செல்வதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அத்துடன் அனல் மின்நிலையம் பகுதியில் இருந்து கடல்நீர் அதாவது உப்பு நீரை வெளியேற்றி தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் விடுவதாகவும், பல்வேறு இடர்பாடுகளை அனல்நிலைய ஒப்பந்தக்காரர்களால் அனுபவிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு திடீரென ஏக்கரா தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்றனர். அப்போது வீசிய பலத்த காற்றின் வேகத்தால் தீ மளமளவெனப் பரவி ஏராளமான மரங்கள் பற்றி எரியத் துவங்கியன. தகவலறிந்து விரைந்துவந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே கடல்நீர் புகுந்தும் விவசாயம் அடியோடு அழிந்து வரும் நிலையில் மர்ம நபர்கள் தீவைத்து விவசாய பொருட்கள், மரங்கள் தீயில் கருகியும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் வேதனைக் குள்ளாகியுள்ளனர். எனவே அரசு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.