உடன்குடி, ஜூன் 26: உடன்குடியில் வாலிபர் கொலையில் தப்பிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். உடன்குடி தேரியூர் ஆண்டிவிளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம். இவரது நண்பர் செல்வபுரத்தை சேர்ந்த தினேஷ் ஆகியோர் கடந்த 20ம் தேதி இரவு தேரியூர் ஆண்டிவிளை கிரிக்கெட் மைதான பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த இதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், ராமர், முருகன், நண்பர் திருச்செந்தூர் மணி, மெஞ்ஞானபுரம் முத்து ஆகியோர் முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் சுயம்புலிங்கத்தை தாக்கினர்.
அப்போது தினேஷ் தப்பியோடினார். தொடர்ந்து சுயம்புலிங்கத்தை அருகில் உள்ள பள்ளத்திற்குள் தூக்கி வீசி விட்டு அவர்கள் தப்பினர். மறுநாள் காலை தினேஷ் சென்ற பார்த்தபோது சுயம்புலிங்கம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுயம்புலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து சகோதரர்களான ஆறுமுகம், ராமர் ஆகியோரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க திருச்செந்தூர் சப்-டிவிஷன் குற்றத்தடுப்பு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இருதரப்பு மோதல் குறித்து ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இக்கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ள சுயம்புலிங்கத்தின் உறவினர்கள், குற்றவாளிகளையும் தப்ப விட்டு பிடிக்க முடியாமல் திணறி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.