உசிலம்பட்டி ஜூலை 5: உசிலம்பட்டி அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்திச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இந்த ரேஷன் டையிலிருந்து வேன் மூலம் 40 மூடை ரேசன் அரிசியை மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்றனர். அப்போது அங்க வசிக்கும் இளைஞர்கள் அவர்களின் வாகனத்தை மடக்கிப்பிடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரேஷன் அரிசி கடத்தல் குறித்து போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் கடத்தலில் ஈடுபட்டோர் அரிசி வைக்கப்பட்ட வாகனத்துடன் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் இளைஞர்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகள் அடிப்படையில், ரேஷன் அரிசி கடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கடத்தல் தொடர்பாக விஏஓ ராமகிருஷ்ணன் அளித்த புகார் அடிப்படையில் உசிலம்பட்டி தாலுகா விநியோக அதிகாரி மயிலேறிநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அய்யனார்குளம் ரேஷன் கடை விற்பனையாளர் கிருஷ்ணன் மற்றும் எடையாளர் இளையராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.