உசிலம்பட்டி, அக். 16: உசிலம்பட்டி அருகே உள்ள கிராம பகுதிகளில், கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரரை அடுத்து உ.வாடிப்பட்டி, வெள்ளை மலைப்பட்டி, பசும்பொன்நகர் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிறிய மலைப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்தப் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ஈஸ்வரி அவரது தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென்று கரடி ஒன்று அவரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காட்டுப் பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதாக கிராம மக்களிடம் அவர் தெரிவித்தார். இதனையடுத்து இப்பகுதி மக்கள் கரடி வந்து தாக்கி விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே கரடி நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு செய்து, இருந்தால் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபகுதியில் ஒருவர் நான்கு வருடங்களுக்கு முன்பு கரடி தாக்கியதில் இறந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.