உசிலம்பட்டி, செப். 3: உசிலம்பட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, பேரையூர் சாலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்த போராட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் தவமணி, செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராமர், பாண்டியன், நாகராஜ், சின்னச்சாமி, வீரையா, செல்வகுமார், குட்டி ராஜா, ராமர் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.