உசிலம்பட்டி, மே 31: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு தியாகராஜன் தலைமையில் பி.கே.மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி பிஆர்சி பணிமனையில் இருந்து பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் எதிரே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் பிகே.மூக்கையா தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் உசிலம்பட்டி மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், முதல்வர் முக.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே கண்டிப்பாக உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்த்தவில்லை என்றால் தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.