உசிலம்பட்டி, நவ. 8: உசிலம்பட்டியில் மின்வாரிய கேங்மேன்களுக்கு, பருவமழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த, பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கோட்ட அலுவலகத்தில், கேங்மேன்களுக்கு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் செக்கானூரணி, எழுமலை, நாகமலை புதுக்கோட்டை, உத்தப்பநாயக்கனூர், சின்னகட்டளை, சிந்துபட்டி, வாலாந்தூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மின்சார அலுவலகத்தில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மின் விபத்துகள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை, அதற்கான மொபைல் ஆப் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. முடிவில், கேங்மேன்கள் அனைவரும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.