உசிலம்பட்டி, நவ. 4: உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில், இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு மற்றும் கேப்பை கூழ், முளைகட்டிய பயறு வகைகள், சத்துமாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, புட்டு மற்றும் காய்கறி, பழங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் என 100க்கும் அதிகமான இயற்கை உணவுகளை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ, மாணவிகள் தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த நிகழ்வில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இயற்கை உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்திய மாணவ, மாணவிகளை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.