நன்றி குங்குமம் டாக்டர்பலவிதமான பற்பசை விளம்பரங்களுக்கு இன்று பஞ்சமில்லை. இதை பயன்படுத்துகிறீர்களா, இல்லை அதையா பயன்படுத்துகிறீர்கள் என்று ஆரோக்கிய அக்கறையுடன் வெளியாகும் டூத் பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை அதிகம் குழப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. பல் டாக்டர் போலவே வேடம் போட்ட நடிகர்களும் தங்களை டாக்டராகவே பாவித்து சீரியஸாகப் பேசி அச்சுறுத்துகிறார்கள். உண்மையில் பிரச்னையே இந்த விளம்பரங்களும், அந்த பற்பசை நிறுவனங்களும் தான் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.உங்க டூத் பேஸ்ட்டில் சர்க்கரை இருக்கிறதா, மிளகு இருக்கிறதா, சீரகம் இருக்கிறதா என்று பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பும் விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, அதிலிருக்கும் புற்றுநோயைத் தூண்டும் ரசாயனக் கலப்பு பற்றி தெரியாது. பளீர் நிறம், நறுமணம், அதிக நுரை போன்றவை இருந்தால்தானே பொதுமக்களுக்கு ஒரு டூத்பேஸ்ட்டைப் பிடிக்கும். மீண்டும் மீண்டும் விரும்பியும் வாங்குவார்கள். ஆனால், இந்த ஃப்ளேவர்களே புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன எமன் என்கிறது Canadian Medical Association. டூத் பேஸ்ட்டில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஃப்ரஷ்னஸுக்காக சேர்க்கப்படும் டிரைக்ளோஸான்(Tricloson) மிகவும் ஆபத்தான ஒரு வேதிப்பொருள். புண்களை ஆற்றும் ஆன்ட்டிசெப்டிக் ஆயின்ட்மென்ட், ஃபேஷியல் டிஸ்யூஸ், லாண்டரியில் உபயோகிக்கும் டிடெர்ஜெண்ட் போன்றவற்றில் இந்த டிரைக்ளோஸானைச்சேர்க்கிறார்கள். அத்தகைய வீரியம் கொண்ட டிரைக்ளோஸானை டூத் பேஸ்ட்டில் சேர்த்தால் நம் வாய் என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள் என்று கேள்வி கேட்கிறது இங்கிலாந்திலிருந்து வெளிவரும் Journal of Research Toxicologists பத்திரிகை. இந்த டிரைக்ளோஸான் வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் ட்ரைக்ளோஸான் சேர்க்கப்படும் பொருட்களை தடை செய்யும் முயற்சியிலும் இருக்கிறது. எனவே, கண்ட விளம்பரங்களைப் பார்த்து டூத் பேஸ்ட் வாங்கிப் பயன்படுத்தி சிக்கலுக்கு ஆளாக வேண்டாம். முக்கியமாக டிரைக்ளோஸான் சேர்க்கப்பட்ட பற்பசையைத் தவிர்ப்பது நல்லது. பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பற்பசையைப் பயன்படுத்துவதும் நல்லதே என்று ஆலோசனை சொல்கிறது Canadian Medical Association.;- என்.ஹரிஹரன்