ஊட்டி, ஜூன் 16: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் முதல் அனைத்து துறை அலுவலர்களும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் தங்கியிருந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காண வேண்டும். இதனை முன்னிட்டு 18ம் தேதி முற்பகல் 9 மணியளவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டமானது குன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.
இதில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும், தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை கள ஆய்வில் ஈடுபடும் அலுவலர்களிடம் நேரில் அளித்தோ அல்லது பிற்பகலில் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார்.