சென்னை, மே 31: வேப்பேரி ஈவெரா சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த வேப்பேரி சட்டம் ஒழுங்கு எஸ்ஐ தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார். புரசைவாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகேஸ்வரன் (50). இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை தனது மாமியார், மாமனாரை எழும்பூர் ரயில் நிலையத்தில் விடுவதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் காரை ஓட்டி சென்றார். வேப்பேரி ஈவெரா சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்றபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த மகேஸ்வரன் உடனே காரை நிறுத்தி, மாமனார், மாமியாரை வேகமாக கீழே இறக்கினர். சிறிது நேரத்திற்குள் கார் மளமளவென முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இன்றி உயிர்தப்பினர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுமையாக எரிந்து எலும்புக்கூடானது. இந்த விபத்து குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ேவப்பேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.