ஈரோடு, ஆக. 12: ஈரோட்டில் முதுநிலை நீட் தேர்வினை 4 மையங்களில் 698 பேர் எழுதினர். மருத்துவ படிப்பில் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய மருத்துவ அறிவியல் வாரியம் சார்பில் நாடு முழுவதும் நேற்று முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, நந்தா இன்ஜினியரிங் கல்லூரி, செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரி, ஆப்பக்கூடல் சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி என 4 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இத்தேர்வினை 698 பேர் எழுதினர். முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் நுழைவுச்சீட்டை ஆய்வு செய்து, பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முதுநிலை நீட் தேர்வு நடந்த 4 மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.