ஈரோடு: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வருகிற 15ம் தேதி நிதி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவர் கணேசமூர்த்தி எம்பி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர் திருப்பூர் எம்பி சுப்பராயன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, எம்எல்ஏக்கள் அந்தியூர் வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி சரஸ்வதி, மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி, உதவி கலெக்டர் மணீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை உரையாற்றி பேசியதாவது: மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் விபரமும், முன்னேற்றம், திட்டங்கள், பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதேபோல தமிழ்நாடு அரசின் சார்பில் பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வருகிற 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.