ஈரோடு, அக். 25: ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளிலும், ஜவுளி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதிகளில் ஜவுளி சந்தை வாரந்தேறும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கூடும். இந்த சந்தையில் கடந்த 2 வாரங்களாக தீபாவளி பண்டிகை விற்பனைக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி சென்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 18 நாட்களே இருப்பதாலும், விஜயதசமி விடுமுறை என்பதாலும் நேற்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் ஒரே நாளில் குவிந்ததால், ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதனால், ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 60 சதவீதத்திற்கு மேல் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு ஆர்.கே.வி.சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை போன்ற, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயதசமி விடுமுறை நாளான நேற்று தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்க அனைத்து ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மேலும், கடை வீதிகளில் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்க வந்த மக்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி சென்றதால் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.