ஈரோடு, ஜூலை 31: ஈரோட்டில் 80 அடி சாலையில் பன் ஸ்ட்ரீட் என்ற தலைப்பில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள் என குவிந்து ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் குதூகலமாக கொண்டாடினர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் ‘பன் ஸ்ட்ரீட்’ என்ற தலைப்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். ஈரோடு எஸ்பி ஜவகர் முன்னிலை வகித்தார். மேயர் ஜானகி ரவீந்திரன், மாநகர பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்.
இதைத்தொடர்ந்து, அங்கு பாரம்பரிய கும்மியாட்டம், சிலம்பம் சுற்றுதல், சைக்கிள் சாகசம், நடனம், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பெரிய சக்கரங்களை கைகளால் திருப்பி போடுவது, பந்து விளையாட்டுகள், போதை பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்பத்தினர், குழந்தைகளுடன் வந்து பங்கேற்று ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கண்டு குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி காலை 6 மணிக்கு துவங்கி காலை 9.30 மணிக்குள் நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.