ஈரோடு,ஆக.15: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரீத் பாரத் திட்டத்தில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அம்ரீத் பாரத் திட்டத்தில் ரூ.38 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில், ரயில்வே ஸ்டேஷனுக்குள் ஒரு நடைமேடையில்(பிளாட்பார்ம்) இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்ல ஏதுவாக நடை மேம்பாலம், கூடுதல் எக்ஸ்லேட்டர்கள்,லிப்ட்கள்,ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் பெரிய அளவிலான பார்க்கிங் வசதி, நவீன வசதிகளுடன் முன்பதிவு அறை, பயணிகள் தங்கும் அறை,ஒய்வு அறை போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,அவர் மேம்பாட்டு பணிகள் நடக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும், ரயில்வே ஸ்டேஷனில் வழித்தடங்கள் மற்றும் நடைப்பாதைகளின் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் உட்பட சேலம் கோட்டத்தில் உள்ள 15 ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போது இந்த பணிகள் 60 முதல் 70 சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளது.அனைத்து பணிகளும் இந்த நிதி ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நடை மேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
ரயில் பயணிகளின் வசதிக்காக உணவகமும் அமைக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக ரயில்டெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து இடங்களிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே ஸ்டேஷனில் நடைபெறும் திருட்டு போன்ற குற்றச்சம்பங்களை தடுக்கும் வகையில், ரயில்வே ஸ்டேஷனில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.