ஈரோடு, ஜூன் 30: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (1ம் தேதி) நடைபெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ஈரோடு மாநகராட்சியில் நாளை ( 1ம் தேதி), எல்லை மாரியம்மன் கோயில் முதல் ஸ்வஸ்திக் கார்னர் வரையும், 2ம் தேதி, எல்லை மாரியம்மன் கோயில் முதல் கனிமார்க்கெட், பன்னீர்செல்வம் பார்க், அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையும், 3ம் தேதி, ஸ்வஸ்திக் கார்னர் முதல் அரசு மருத்துவமனை வழியாக காளைமாடு சிலை வரையும், சாலையோரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், ஈரோடு மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம், பேரிடர் மேலாண்மை, தொலைதொடர்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.