ஈரோடு, ஆக.3: ஈரோடு புத்தகத்திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இவ்விழாவுக்கு ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ் தலைமை வகித்தார். பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் புத்தக அரங்கினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உலகத்தமிழர் படைப்பரங்கை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திறந்து வைத்தார். தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் மயிலானந்தன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற சிந்தனை அரங்கில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார். நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். இவ்விழாவில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை புத்தகத்திருவிழா நடைபெறும்.