ஈரோடு, ஆக. 20: நூல் விலை உயர்வு காரணமாக ஈரோடு பகுதிகளில் 2 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான விசைத்தறிகளில் ரயான் மற்றும் இலவச வேட்டி, சேலை ரகங்கள், பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், ஈரோடு அடுத்த திண்டல், மேட்டுக்கடை, வள்ளிபுரத்தான்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு, பாலி காட்டன் வேட்டிகள், கேரளா ரக வேட்டிகள், மெத்தை விரிப்புகள், கிரே காடா துணிகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவைகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஜவுளி வணிகர்கள், விசைத்தறியாளர்களிடம் கூலிக்கு நெசவு அடிப்படையில் உற்பத்தி செய்த ஜவுளி ரகங்களை பெற்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆடி மாத சீசன் விற்பனை சரிவு, நூல் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் துண்டு, மெத்தை விரிப்பு, வேட்டிகளின் விற்பனையும், உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த ரகங்களை உற்பத்தி செய்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன. இதனால், விசைத்தறியாளர்களும், அவர்களிடம் வேலை செய்த தறி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், கடந்த ஓராண்டுகளாக விசைத்தறி உதிரி பாகங்கள் விலை, தொழிலாளர்களின் கூலி உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் உற்பத்திக்கான கூலி உயர்த்தப்படவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையை போக்கி விசைத்தறி தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.