Sunday, June 4, 2023
Home » ஈரோடு கிழக்கு தோல்விக்கு எடப்பாடி என்னும் நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் காரணம்: ஓபிஎஸ் அறிக்கை

ஈரோடு கிழக்கு தோல்விக்கு எடப்பாடி என்னும் நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் காரணம்: ஓபிஎஸ் அறிக்கை

by kannappan

சென்னை: ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலிவின்மையில்தான் இருக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். நேற்றைய ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி, பத்தாண்டு காலம் தமிழ்நாட்டிற்கு பொற்கால ஆட்சியை அளித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. புரட்சித் தலைவர் அவர்கள் உருவாக்கிய இயக்கத்தை கட்டிக் காத்து, பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் அர்ப்பணிப்புப் பணிதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு எடுத்துச் சென்றதோடு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வழிவகுத்தது. மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கழகத்தை உச்ச நிலைக்கு எடுத்துச் சென்றவர் அம்மா அவர்கள். இப்படிப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தினை, தொண்டர்கள் இயக்கத்தினை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும்; கழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இவற்றைப் பார்க்கும்போது, ‘பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான்.” என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். புரட்சித் தலைவர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை’ சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக் கொண்ட நிலையில்; உச்ச நீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியபோது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், ‘இரட்டை இலை சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே.பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். ‘தான்’ என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் அடையாளம் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. நீதியும், நேர்மையும் தவறாமல், நடுநிலையோடு சிந்தித்து, தர்மத்தின் பக்கம் நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது. எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலைமையோடு எல்லோரையும் அரவணைத்து கழகத்தை மூத்தத் தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செய்கிற நன்றிக் கடன் ஆகும். கழகத் தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi