சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மனுவில், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் அளிக்கப்படும் நிலையில், அதை தேர்தல் நடத்தும் சமயத்தில் பரிசீலிப்பதில்லை. தேர்தல் முடிந்த பிறகும் அடுத்த தேர்தலின்போது தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பணம் கொடுத்து வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார். பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாட்களில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. …