ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 9.15 மணிக்கு மேல் முதல் சுற்று முன்னணி நிலவரம் தெரிய வரும். அதிமுகவில் நடக்கும் அதிகார சண்டைக்கு இந்த தேர்தல் முடிவு கட்டுமா? என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், இந்த தேர்தல் முடிவுக்கு பின், எடப்பாடியின் எதிர்கால அரசியல் என்னவாகும் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தல் முடிவைப் பொறுத்துத்தான் ஓபிஎஸ் கட்சியை மீண்டும் கைப்பற்ற நினைப்பாரா அல்லது கைவிடுவாரா என்று தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் உட்பட 77 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 74.79% வாக்குப் பதிவாகியிருந்தது. வாக்குப் பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது.முன்னதாக, தேர்தல் நடத்தும் அலுவலரின் சீல் வைக்கப்பட்ட அறையில் உள்ள தபால் வாக்கு பெட்டிகள் 7 மணிக்கே கொண்டு வரப்பட்டு எண்ணுவதற்கு தயார் நிலையில், வைக்கப்படும். தொடர்ந்து, 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அவை எண்ணப்பட்டவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையின்போது கால தாமதத்தை தவிர்க்க 2 அறைகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.அதன்படி, தரைத்தளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் என மொத்தம் 16 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர் உள்பட 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்கின்றனர். மொத்தம் 15 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலை 10 மணிக்கு முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னணி நிலவரம் தெரியவரும். இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி இடையே யார் வேட்பாளரை நிறுத்துவது என்ற போட்டி எழுந்தது. இரு அணிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் இரட்டை இலை முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இரட்டை இலை இல்லாமல் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என கூறி இரு அணிகளிலும் போட்டியிட யாரும் முன்வரவில்லை. இதனால், தேர்தல் செலவுகளை நாங்களே ஏற்கிறோம் என இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி நிறுத்தினர். முதலில் ஓபிஎஸ்சும், பிறகு எடப்பாடியும் வேட்பாளர்களை அறிவித்தனர். இந்த தேர்தல் முடிவு பாஜவை எடை போடும் தேர்தலாக மாறியதால், வேட்பாளர்கள் தேர்வில் பாஜ மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்தது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தங்களுக்கு நல்ல இமேஜ் இருக்க வேண்டும் என்று எண்ணி அதிமுகவை பாஜ பலிகடாவாக்கி வருகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக தலையில் கட்டி பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது. இறுதியாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற்றவரை வேட்பாளராக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாஜ தலையிட்டால் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். எடப்பாடிக்கு பாஜ ஆதரவு தரவே அவரது வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பிரசாரத்துக்கே போகவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். பணத்தை வாரி இறைத்தனர். கடைசியில் ரூ.5 ஆயிரத்துக்கு டோக்கன் கொடுத்தனர். இவ்வளவுக்கு பிறகும் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளருக்கு டெபாசிட்டாவது கிடைத்தால்தான் எதிர்காலத்தில் அரசியல் செய்ய முடியும் என்பதால் பணம், பரிசுப் பொருள் என வாரி இறைத்தனர். இந்த தேர்தல் முடிவு எடப்பாடி பழனிசாமியின் கதி என்னவாகும் என்பதை நிர்ணயிக்கும் என்பதோடு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் அரசியல் கட்சிகள் பார்ப்பதால், இதன் முடிவுகளை அறிய அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் அறிய காத்திருக்கின்றனர். அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்றால், சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் வேலையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பாஜவை நம்பிபோன ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவை கைப்பற்று முயற்சிப்பாரா அல்லது கைவிடுவாரா என்பதும் தெரிந்துவிடும்.முடிவு அறிவிக்க தாமதமாகும் 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பதிவுகள் எழுதிய பிறகே அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் ஒவ்வொரு சுற்று முடிவு அறிவிப்பதற்கும் காலதாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: வாக்கு எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒவ்வொரு வேட்பாளர் எத்தனை வாக்குகள் பெற்றுள்ளார் என்பதை குறிப்பிட வேண்டும். சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை என்றாலும் அதையும் ஒவ்வொரு சுற்று முடிவிலும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் 78 பேரின் பெயருக்கு கீழே குறிப்பிட வேண்டிய சூழல் உள்ளதால் காலதாமதம் ஏற்படும். எனவே பிற்பகலுக்கு பிறகுதான் முடிவுகள் தெரியவரும். இறுதி சுற்று முடிந்ததும், தபால் ஓட்டுகள் நிலவரத்தையும் பதிவு செய்த பின்னர் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக மாலையில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்….