ஈத்தாமொழி : ஈத்தாமொழி அருகே செம்பொன்கரை காலனியை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுரேந்தர் (18 ).பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது மீன் வண்டியில் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு மீன் வண்டிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரண்டு தினங்களில் வீடு திரும்ப வேண்டிய அவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது, செல்போன் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. பெற்றோர் அவர்களது உறவினர்கள் மற்றும் சுரேந்தர் நண்பர்கள் என அனைவரிடமும் விசாரித்து உள்ளனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சந்திரன் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.