பெரம்பலூர்,ஆக.25: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் மதிவாணன்(28). இவர் நேற்று காலை பெரம்பலூரிலிருந்து துறையூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர்- துறையூர் நெடுஞ் சாலையில், ஈச்சம்பட்டியிலுள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பெரம்பலூர் நோக்கி வந்த வேன் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். விபத்து குறித்துத் தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மதிவாணன் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து டெம்போ டிராவலர் டிரைவர் விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த சேகர் மகன் ரமேஷ் (37) என்பவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.