ஒரத்தநாடு ஆக, 18: ஒரத்தநாடு நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரை ஆற்றங்கரை சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை ஒரத்தநாடு உட்கோட் பராமரிப்பில் கல்லணை கரை கால்வாய் சாலை உள்ளது. இச்சாலையானது கல்லணை கால்வாய் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இச்சாலையில் ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரையிலான சாலை போக்குவரத்து நிறைந்த சாலை.
இச்சாலை வழியாக தஞ்சாவூரில் இருந்து வெட்டிக்காடு, ஊரணிபுரம், திருவோணம் மற்றும் கரம்பக்குடி ஆகிய ஊர்களுக்கு பொது மக்கள் விரைந்து சென்றுவர முடியும். எனவே, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் மேம்படுத்த திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே சென்ற நிதியாண்டுகளில் ஈச்சங்கோட்டை முதல் செல்லம்பட்டி வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறின்றி எளிதாக சென்று வர முடிந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இத்திட்டத்தை வரவேற்றனர். தற்போது இந்த நிதியாண்டில் செல்லம்பட்டி முதல் உப்புண்டார் பட்டி வரை உள்ள சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் தற்போது முடிவு பெற்றுள்ளன.
மேற்கண்ட பணிகளை தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மீதமுள்ள பணிகளை உடனடியாக முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஒரத்தநாடு உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் திருவோணம் இளநிலை பொறியாளர் ரஹிமுன் நிஷா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், இச்சாலையை வெட்டிக்காடு வரை அகலப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.