திருவில்லி/ராஜபாளையம், செப்.12: திருவில்லிபுத்தூரில் இ.பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி நேற்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 15ம் தேதி வரை 5 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர். இ.பைலிங் நடைமுறையில் சிக்கல்களும் பல்வேறு பிரச்சனைகளும் அதிகமாக உள்ளது. இ.பைலிங் நடைமுறையால் வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.
எனவே இ.பைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவுவாயில் அருகே வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி 15ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதேபோல் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பெண்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.