திருவனந்தபுரம்: இஸ்ரேல் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன விவசாய முறைகளை தெரிந்து கொள்ள கேரளாவை சேர்ந்த 28 பேர் அடங்கிய விவசாயிகள் குழு கடந்த 12ம் தேதி அந்நாட்டுக்கு சென்றது. கடந்த 17ம் தேதி இந்த குழுவுடன் சென்ற கண்ணூர் மாவட்டம் இரிட்டி பகுதியைச் சேர்ந்த பிஜு குரியன் என்ற விவசாயி திடீரென மாயமானார். இது தொடர்பாக இஸ்ரேல் நாட்டு போலீசிலும், இந்திய தூதரகத்திலும் புகார் செய்யப்பட்டது. திட்டமிட்டுத் தான் பிஜு குரியன் சென்றிருக்கிறார். அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள விவசாயத்துறை அமைச்சர் பிரசாத் கூறினார். இந்தநிலையில் தான் பத்திரமாக இருப்பதாகவும், இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டதாகவும் நேற்று முன்தினம் மாலை பிஜு குரியன் தனது தம்பி பென்னியிடம் போன் செய்து கூறினார். இதை அமைச்சர் பிரசாத்தும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் பிஜு குரியன் விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். அப்போது அவர் கூறியது: பெத்லகேம் உள்பட சில புனித நகரங்களுக்கு செல்வதற்காகத் தான் நான் சென்றேன். அதற்கு அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காது என்பதால் யாரிடமும் கூறாமல் மாயமானேன். ஆனால் என்னை காணவில்லை என்று தகவல் பரவியதால் எனக்கு பயம் ஏற்பட்டது. இதனால் தான், நான் யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்தேன். என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு கேரள அரசிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னைத் தேடி எந்த போலீசும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்….