மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வரும் அனிதா சத்தியம் காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்ட்ரா மாநிலம் புனாவில் தான் என்றாலும் சரளமாக தமிழ் பேசுகிறார். புற்று நோய் வருவதற்கான அறிகுறி ஆரம்பத்திலே தெரிந்ததால் முறையான சிகிச்சை மூலம் புற்று நோயை கடந்து வந்தவர் அனிதா. பொழுதுபோக்காக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அனிதா. தன் கேமராவை பெண்கள் விழிப்புணர்வுக்காக பயன்படுத்த தொடங்கினார். மார்பகப் புற்றுநோய் பற்றி சரியான புரிதல் இல்லாத கிராமப்புற பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களை தன் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார் அனிதா சத்தியம்.“மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்தக் காரணம்?”“நானும் அந்த நிலையைக் கடந்து வந்தவள். எனக்கு அறிகுறி தெரிஞ்ச உடனே முதல்லே என்னோட கணவர்கிட்டே சொன்னேன். அப்புறம் டாக்டர்கிட்டே போய் பார்த்தோம். முதல்லே ஒரு மூணு வாரம் சாதாரண வலி தான்னு டாக்டர் சொல்லிட்டு வந்தாரு. அப்புறம் தான் வலி இருந்த இடத்திலே கட்டி மாதிரி வளர ஆரம்பிச்சது. அப்புறம் தான் கேன்சர் கட்டினு கண்டுபிடிச்சோம். ஆரம்பத்திலே தெரிஞ்சதாலே சரி பண்ணிட்டேன். குடும்பத்திலே நேரடியா சொல்றதுக்கான சுதந்திரம் இருந்ததாலே நான் சொன்னேன். என்னோட கணவர், குடும்பம்ணு எலோருமே எனக்கு உருதுணையா இருந்தாங்க. ஆனா விழிப்புணர்வே இல்லாத கிராமப் புறங்களிலே இருக்கிற பெண்களோட நிலை ரொம்ப மோசமானதா இருக்குது. அவர்கள்கிட்டே விழிப்புணர்வை ஏற்படுத்தணும், அவர்களோட உரையாடனும் அதனால தான் கேமராவோடு பயணப்பட ஆரம்பிச்சேன்.”“கேன்சர் செல் பரவும் போது அறிகுறி தெரியுமா?”“கண்டிப்பா அறிகுறி தெரியும். பொதுவா பெண்களுக்கு மாதவிடாய் நேரங்கள்லே மார்பகத்திலே வலி இருக்கும். எப்பவும் வர்ற சாதாரண வலி தானேன்னு கவணிக்காம விட்டுறக் கூடாது. மூன்று மாசத்துக்கு ஒரு முறையாவது பெண்கள் ஃபுல் பாடி செக்கப் பண்றது நல்லது. அறிகுறி தெரியும் போதே நெருங்கி இருக்கிறவங்க கிட்டே சொல்லணும். எந்த நோயா இருந்தாலும் ஆரம்பத்திலே சிகிச்சை எடுக்கும் போது குணப்படுத்தி விடலாம்.”“அறிகுறி தெரிந்தும் பெண்கள் ஏன் வெளியே சொல்ல தயங்குறாங்க?”“பெண்கள் தங்களோட உடல் உறுப்புகளோட பெயரைச் சொல்லவே தயங்குறாங்க. அப்புறம் வீட்டிலே கணவர் என்ன சொல்லுவாரு, மாமியார் என்ன சொல்லுவாங்களோனு பயம். முக்கியமா அப்புறம் பார்த்துக்கலாம்னு நினைக்கிற அலட்சியம். காலையில் எழுந்ததிலே இருந்து நைட்டு தூங்குற வரைக்கும் வேலை பார்த்துட்டே இருப்பாங்க. யார்கிட்டேயும் உட்கார்ந்து பேசறதுக்கான நேரம் இருக்கிறதில்லே. எப்போ கட்டி பெருசா வளர்ந்து மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு போறாங்களோ அப்போ தான் சொல்லுவாங்க. அது கடைசியிலே ஆபத்தில் தான் போய் முடியும். அறிகுறி தெரியும் போதே அது கேன்சர் கட்டியா இல்ல சாதாரண கட்டியான்னு செக் பண்ணி பார்க்கணும். அப்போ தான் ஆரம்பத்திலேயே சிகிச்சை மூலமா சரி பண்ண முடியும்.”“பெண்கள் விழிப்புணர்வோடு இருக்காங்களா?”“பிரபலமான ஒரு பெண்கள் கல்லூரியிலே நான் ஆவணப்படுத்திய புகைப்படங்களை வச்சி கண்காட்சி நடத்தினேன். பெரும்பாலான பெண்கள் விழிப்புணர்வு இல்லாமலே தான் இருந்தாங்க. நடிகைகளுக்கும் பிரபலமானவங்களுக்கும் கேன்சர் வந்த செய்தியை பேசுற அளவுக்கு தான் பெரும்பாலான பெண்கள் இருக்காங்க. ஏன் வருது, எப்படி வருது, எப்படி தடுக்கலாம் என்கிற எந்த விழிப்புணர்வும் இல்லே. நகர் புறத்திலே இருக்கிற இப்படியான நிலையிலே தான் இருக்காங்க. கிராமத்திலே இருக்கிற பெண்களை நினைச்சி பாருங்க. இன்னும் கிராமத்திலே கேன்சரை பத்தி பெரிய மூட நம்பிக்கை இருக்கு. கேன்சரை தொற்று நோயா நினைக்கிறாங்க. சின்ன வயசிலே கேன்சர் வந்து குணமாகி இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களை யாரும் கல்யாணம் பண்ணிக்கிறதில்லே. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவங்க பெரிய தாழ்வு மனப்பான்மையோடு இருக்காங்க. வெளிய தெரிஞ்சிட்டா கூட யாரும் பேச மாட்டாங்க என்கிற பயம் இருக்குது. புற்று நோய் பரவக்கூடிய நோய் இல்லை.”“மார்பக புற்று நோய் வருவதற்கு முக்கிய காரணம்?”“சிகரெட் பிடிக்கிறவங்க, மது குடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் கேன்சர் வருதுன்னு சொல்றாங்க. அப்போ ஐந்து வயசு குழந்தைக்கு வருதே அதை என்ன சொல்ல. பெண்கள் எல்லாம் தண்ணி அடிக்கிறாங்க, சிகரெட் பிடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா? இல்லையே. உணவு முறைதான் முக்கியக் காரணமா நினைக்கிறேன்.”“பொதுவா என்ன மாதிரி உணவு வகைகளை சாப்பிடலாம்?”“கீரை, காய்கறி வகைகளை அதிகம் எடுத்துக்கணும், குறிப்பா முருங்கை கீரை அதிகம் சாப்பிடணும். கெமிக்கல்ஸ் பயன்படுத்தாத ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடணும். புற்று நோய் ஆரம்ப நிலையிலே இருக்கிறவங்க, அல்லது பாதிக்கப்பட்டவங்க ‘நித்திய கல்யாணி’ பூவை எடுத்து கொதிக்க வைச்சி கசாயமாக குடிக்கலாம். இதை கிராமத்திலே சுடுகாட்டு மல்லின்னும் சொல்றாங்க. வேர் பகுதியை தவிற மற்ற எல்லாபாகத் தையும் கசாயமா பண்ணி குடிக்கலாம். வெறும்வயிற்றிலே முப்பது நாளைக்கு குடிக்கணும். இந்த நித்திய கல்யாணி கிராமங்கள்லே கூட அதிகம் கிடைக்கிறதில்லே. அப்புறம் கம்பு, திணை, சாமை போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கணும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலா பனைவெல்லம் பயன்படுத்துங்க. கரு சீரகத்தை கொதிக்க வச்சி குடிக்கணும். பெண்கள் முக்கியமா ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை தவிர்க்கணும்.”“உங்க புகைப்படப் பயணம் எதை நோக்கி இருக்கும்?”“இன்னும் பத்து வருசத்திலே கேன்சர் அதிகம் பரவ வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. மார்பகப் புற்று நோயை பற்றி பெரும்பாலான பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லே. குறிப்பா கிராமப்புற பெண்கள் கிட்டே இல்லை. அவங்களை சந்திக்கணும், நிறைய உரையாடனும், பாதிக்கப்பட்டவங்களை ஆவணப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தணும். அதை நோக்கித் தான் போயிட்டு இருக்கு.”– தீக்சா தனம்படங்கள் : தமிழ்வாணன்…
இவர் வேற மாதிரி போட்டோகிராபர்!
previous post