திருச்சுழி, மே 29: நரிக்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இப்பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.450 பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் போதிய மழை இன்றி சரிவர விவசாயம் நடைபெறவில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்படைந்தனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என ஒரு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து வேளாண் துறை, புள்ளியியல் துறை, வருவாய் துறை, பாரத ஸ்டேட் வங்கி புள்ளி விவரக் கணக்கு எடுத்தது. ஒன்றிய அரசு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.400 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைத்ததாக கூறப்படுகிறது.
காப்பீட்டுக்காக செலுத்திய தொகையை விட குறைவாக வழங்கியதால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், ஒன்றிய அரசை கண்டித்தும், முழுமையான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் நேற்று நரிக்கடி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒன்றிய அரசு காப்பீட்டு தொகையை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் வழங்காமல் மாநில அரசு மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.