Thursday, May 23, 2024
Home » இழப்பிலிருந்து மீள்வது எப்படி?!

இழப்பிலிருந்து மீள்வது எப்படி?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் ‘‘சகல விதமான அனுபவங்களும், அம்சங்களும் கலந்ததே வாழ்க்கை. சில நேரங்களில் சந்தோஷம் கிடைக்கும். பல நேரங்களில் கசப்பான நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் எதிர்பாராத பெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் வாழ்வில் நடைபெறாமல் இருப்பதில்லை. மனரீதியாக பக்குவப்பட்ட பலர் அத்தகைய அதிர்ச்சிகளைக் கடந்து வருகிறார்கள்.ஆனால், சிலர் தடுமாறி விழுந்துவிடுகிறார்கள். அந்த சுழலிலேயே சிக்கிக் கொண்டு வெளியில் வரும் வழி தெரியாமலும் தவிக்கிறார்கள். உளவியல் மருத்துவத்தில் இதனை பிந்தைய மன உளைச்சல் கோளாறு (Post Traumatic Stress Disorder) என்று பெயர். சுருக்கமாக PTSD என்று குறிப்பிடுவதுண்டு’’ என்கிறார் உளவியல் மருத்துவர் வீணா வாணி. பிந்தைய மன உளைச்சல் கோளாறு பற்றி விரிவாகக் கேட்டோம்…PTSD யாருக்கெல்லாம் வரும்?பொதுவாகவே தினசரி வாழ்வில் நமக்கு மன அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏதாவது விபரீத சம்பவம் நடந்து, அதனால் மன அழுத்தம் அதிகமாகி, அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலை இது. நிறைய பேர் PTSD பிரச்னை இருப்பதை சரியாக கண்டுபிடிக்க மாட்டார்கள். வேறு ஏதாவது, டிப்ரஷனாக இருக்கலாம் என நினைப்பார்கள்.அதேபோல வயதானவர்களுக்குத் தான் வரும் என்றில்லை. குழந்தைகள் கூட பாதிக்கப்படலாம். பாலியல் ரீதியான துன்புறுத்தல், உணர்ச்சிகள் ரீதியான துன்புறுத்தல்களால் குழந்தைகள் PTSD-ஆல் பாதிக்கப்படுகிறார்கள். இயற்கைப் பேரிடர்கள், வீட்டில் நெருங்கியவர்களின் மரணம், பெற்றோர்களிடையே வரும் சண்டை போன்றவற்றாலும் இருக்கலாம். எல்லாருக்குமே இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கக்கூடும் என்றாலும், சிலருக்கு அதிலிருந்து விரைவில் வெளிவரும் பக்குவம் இருக்காது. ஆனால், தாங்கும் திறன் அதிகம் இருப்பவர்கள் விரைவில் மீண்டு வந்துவிடுவார்கள். சமூகத்தின் நிலை, உறவுகள், நண்பர்களின் தாக்குதல், தனிப்பட்ட ஒருவரின் இயல்பு என PTSD –க்கு பல காரணிகள் இருக்கின்றன.சென்னைக்கு சுனாமியால் ஏற்பட்ட பொருள் இழப்பைவிட, அதை கண்கூடாக பார்த்தவர்களும், தங்கள் உறவுகளை பறி கொடுத்தவர்களும் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதுதான் அதிகம். இன்று வரையிலும் கூட மனநல மருத்துவர்கள் அந்த பகுதிக்குச் சென்று குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோல் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அனுபவிப்பதாலோ அல்லது பார்ப்பதாலோ தூண்டப்படும் மனநிலையால், பிந்தைய மன உளைச்சல் கோளாறு (PTSD-Post Traumatic Stress Disorder) ஒருவருக்கு வருகிறது. மேலும், மனித மூளை நரம்பு மண்டலத்தில் இருக்கும் சில சுரப்பிகளின் ஏற்றத்தாழ்வுகளாலும் உணர்ச்சிகள் கூடுதலாகவோ, குறைவாகவோ வெளிப்படும். உதாரணத்திற்கு, மூளையின் அரைக்கோளத்தில் இருக்கக்கூடிய Prefrontal Cortex-ன் செயல்பாடு தற்காலிகமாக குறையும்போது, ஒருவருடைய உணர்ச்சித் தூண்டுதல்களை, சாதாரணமாக இருப்பதைக்காட்டிலும், குறைவாக கட்டுப்படுத்தலாம். அடுத்து, உணர்ச்சிகளின் எதிர்விளைவுகளுக்கு, மூளையின் ஆழத்தில் இருக்கும் அமிக்டாலா கூடுதல் சுறுசுறுப்பாக மாறுவதும் காரணமாகிறது.இப்போது நம்முடைய சூழல் நிச்சயமற்ற தன்மையில் இருக்கிறது. சமூகத்தில் நிறைய வன்முறைகள், கலவரங்கள், ஆர்ப்பாட்டங்கள், அதைப்பற்றிய அளவுக்குமீறிய ஊடக வெளிப்பாடுகள் போன்றவை நடக்கின்றன. அதைப்பார்க்கும் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி முன்னைக்காட்டிலும் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால், கொடூர பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். இதன் அறிகுறிகள் என்ன? PTSD இருப்பவர்களுக்கு, சாதாரணமாக ஒரு விஷயம் நடந்தால் கூட, மறுபடியும் அந்த சம்பவம் நடந்துவிடுமோ என்று கூடுதலாக பயப்படுபவர்களாகவோ அல்லது கூடுதல் விழிப்புணர்வுள்ளவர்களாகவோ இருப்பார்கள். எப்போதும் அலர்ட்டாக இருப்பார்கள். சம்பவம் நடந்த ஒரு மாதம் முழுவதும் மன அழுத்தம் இருந்தால் PTSD பிரச்னை இருப்பதாக கொள்ளலாம்.சிலர் 3 மாதங்கள் வரையிலும் கூட தங்களுடைய மன அழுத்தத்தை வளர்த்துக் கொள்வார்கள். தூக்கமின்மை, தூக்கத்தில் கெட்ட கனவுகள், பசியின்மை, வேலையில் நாட்டமின்மை, ஒதுங்குதல், தனிமை, மற்றவருடன் பழகுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இவர்களிடத்தில் காணப்படும். குழந்தைகளிடத்தில் இதுபோல இருந்தால் நாம் ஆட்டிசம் என்று முடிவுக்கு வரக்கூடாது. அதை கண்டுபிடிக்க வேண்டும். வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிகுறிகள் ஏற்படும். தனக்கு ரொம்ப பிடித்தவர்கள் இறந்துவிட்டாலோ, நீண்ட நாள் நோய் இருந்தாலோ, எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். முன்பு நடந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் கண் முன் கொண்டு வந்து, பயப்படுவார்கள்(Flasbacks); இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கொள்வார்கள்(Hallucinations); சிலருக்கு, நிகழ்வுகள் கனவுகளாக வந்து, தூக்கத்தில் விழித்துக்கொண்டு அலறுவார்கள்(Nightmares); அடிக்கடி மாறும் மனநிலை, கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு, மற்றவர்களுடன் தொடர்பின்மை இவர்களுக்கு இருக்கும். அந்த சம்பவத்தோடு தொடர்புடைய நபர்கள், இடங்கள் எண்ணங்கள் அல்லது சூழ்நிலைகளை தவிர்க்கப்பார்ப்பார்கள். குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது அல்லது தனிமைப்படுத்திக் கொள்வது மற்றும் தனக்குப்பிடித்த செயலின்மீது ஆர்வத்தை இழப்பது போன்ற அறிகுறிகள் தென்படலாம். குழந்தைகளாக இருந்தால் இயல்பாக அந்தந்த வயதில் கற்றுக் கொள்ளக்கூடிய பழக்கங்கள் தாமதப்படலாம்.ஒருவருக்கு PTSD இருப்பதை எப்படி கண்டறிவது?மருத்துவர்கள் அவர்களை துல்லியமாக கண்காணிப்பது அவசியம். சாதாரணமாக ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால் வெகு சீக்கிரத்தில் வெளிக் கொண்டுவந்துவிடலாம். ஒரு மாதத்திற்கும் மேல் மன அழுத்தத்தினால் பாதிப்படைந்து, தனக்கு நடந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து பதற்றம் அடைபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு PTSDக்கான சிகிச்சையைத் தொடர வேண்டும். குறிப்பிட்ட இந்தப் பிரச்னைக்கு தனியாக ஆய்வக பரிசோதனை எதுவும் இல்லை என்றாலும், இந்த நோய்க்கான அறிகுறிகளால், உடல்ரீதியான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு ஏதாவது வன்கொடுமை நடந்ததா? குழந்தைகள் என்றால் பள்ளியில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டதா? என்பதை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வோம். மறுக்கும் நடத்தை இருந்தால் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்…உளவியல் மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை இரண்டையும் மேற்கொள்ளும் உளவியல் நிபுணரின் (Psycho therapist) உதவியோடு சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பித்துவிட வேண்டும். மருந்துகளுடன் உளவியல் ஆலோசனையும் சேர்த்து கொடுக்கும்போது, அவர்களின் தினசரி நடவடிக்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். Talk Therapy கொடுப்பது முக்கியம். அவர்களுடன் பேசும்போது, மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் விஷயங்களை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வதால், மன அழுத்தம் குறையும்.கவனச்சிதறல் மிகுந்து இருப்பவர்களுக்கு Cognitive Therapy கொடுக்கும்போது, அவர்களுடைய ஆக்ரோஷமான நடத்தைகள், உணர்ச்சிகளுக்கு காரணமான சிந்தனைகளை கண்டறியவும், அவற்றை மாற்றவும் கற்றுக்கொள்ள முடியும். எதிர்மறை எண்ணங்களை மாற்றி நேர்மறையாக சிந்திக்க வைப்பதோடு, அறிவாற்றல் திறனையும் மறு வடிவமைப்பதாக இந்த சிகிச்சை இருக்கும். உணர்ச்சி சமநிலைப்படுத்தும் மருந்துகள், தூங்கும் நேரத்தை மாற்றி அமைப்பது, தூக்கமின்மை குறைபாடு, உண்ணும் குறைபாடு போன்றவற்றிற்கு ஆலோசனைகள், மருந்துகள் கொடுப்போம். குழந்தைகளாக இருந்தால் பெற்றோரை நன்றாக கண்காணிக்க; வேண்டும். இப்பிரச்னையால் பாதிக்கப் பட்டவர்கள் நான் எதற்கும் லாயக்கற்றவன், நான் குற்றவாளி, என்னால்தான் இது நடந்தது என தன் மீதே பழி சுமத்திக் கொண்டு மிகவும் தாழ்மையாக உணர்வார்கள். உன் மீது தவறில்லை என்பதை குடும்பத்தினர் எடுத்துச் சொல்லி, அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வர வைக்க வேண்டும். உடனிருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ஆதரவாக இருப்பது, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது, அவர்களை தனிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது போன்று, குடும்ப உறுப்பினர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களை அணுகும் முறையைப்பற்றி ஆலோசனைகள் வழங்கினால் இழப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியும்.– உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

6 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi