செயற்கை மெகந்தி மோக அதிகரிப்பால் தோல் நோய் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்டைய காலம் முதல் பெண்கள் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் தங்களை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். வீடுகளுக்கு கோலமிட்டு அலங்கரிப்பது போல், தற்போதுவரை தங்களது கைகளை மருதாணியிட்டு அலங்கரித்து வருகின்றனர். மருதாணிக்கு இயற்கையாகவே பித்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது. ஆனால், அறிவியல் உலகின் வளர்ச்சியின் காரணமாக தற்போது மருதாணியின் இடத்தை செயற்கை மெஹந்தி ஆக்கிரமித்துள்ளது. கைகள் சிவப்படைவதற்காக இந்த செயற்கை வண்ண மெஹந்தியில் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் தற்போது கைகளில் அலர்ஜி ஏற்படுகிறது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் பிரியாவிடம் கேட்டபோது கூறியதாவது: தற்போது இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் அதிகம் விரும்புவது மெஹந்தியைத்தான். மெஹந்தியில் பல வகைகள் உள்ளன. இதில் அரபிக் மற்றும் ராஜஸ்தான் வகை அதிக பிரசித்தி பெற்றவை. பாகிஸ்தானி மெஹந்தி, கிளிட்டர் மெஹந்தி போன்றவையும் இன்றைய இளைய தலைமுறையிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மெல்லிய கோடுகளில், பல்வேறு டிசைன்களில் போடப்படுகிறது. வட மாநிலங்களில் மட்டுமே பிரசித்தி பெற்றதாக விளங்கி வந்த இந்த மெஹந்தி கலாச்சாரம், தற்போது தமிழகத்தில் பெருநகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களில் உள்ள இளம்பெண்களையும் கவர்ந்து இழுத்துவிட்டது.இதுகல்லூரி மாணவி நித்யாவிடம் கேட்டபோது கூறியதாவது: மருதாணி போட்டுக்கொண்டால், அதனை உலர வைக்க சில மணி நேரங்கள் ஆகும். ஒரே வண்ணத்தில் மட்டுமே இருக்கும். நினைத்த டிசைன்களில் போட முடியாது. ஆனால், மெஹந்தியில் பல வண்ணங்கள் உள்ளது. தற்போது மினுமினுப்பு வகையும் வந்துவிட்டது. விதவிதமான டிசைன்களில் போட்டுக் கொள்ளலாம். உலர வைக்க பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. விதவிதமான டிசைன்களில் மெஹந்தி வைத்துக் கொண்டு, கல்லூரிக்கு சென்றால், மற்ற மாணவிகள் மத்தியில் பெருமையாக இருக்கும் என்றார்.இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரனிடம் கேட்டபோது கூறியதாவது: இயற்கையில் கிடைக்கும் மருதாணி மருத்துவ குணம் கொண்டது. உடல் சூட்டை குறைக்கிறது. கண் எரிச்சலை குறைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், முடி உதிர்தல் பிரச்சனையை போக்கும். ஆனால், செயற்கையாக தயாரிக்கப்படும் மெஹந்தியில் இத்தகைய நலன்கள் கிடைக்காது. மாறாக சில தரம் குறைந்த மெஹந்தியை பயன்படுத்தினால் தோல் நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இளைய தலைமுறை இடையே அதிகரிக்கும் செயற்கை மெஹந்தி அலங்காரம்: தோல் நோய் அபாயம்
47