இளையான்குடி, அக்.25: சிவகங்கை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இளையான்குடி வளமையத்தில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இளையான்குடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாணவர்களின் பல்வேறு கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் மாநில அரசு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
அந்த வகையில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற தனிநபர், குழுவினர் வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் இளையான்குடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் பள்ளியின் தாளாளர் ஜோஸ்ஃபின் பாத்திமா, முதல்வர் அமலி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்லஸ், பால் டேவிட், ஜஸ்டின் பிரான்சிஸ், மேற்பார்வையாளர் பிரான்சிஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாதன்,ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ தலைமையாசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.