இளையான்குடி, செப்.13: இளையான்குடியில் தாசில்தாரை கண்டித்து, விஏஓக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளையான்குடி தாலுகாவில் உள்ள 55 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், 51 கிராம நிர்வாக அலுவலர்கள் எனப்படும் விஏஓக்கள் பணிபுரிந்து வருகின்றனர். விஏஓக்கள் சமர்ப்பிக்கும் கோப்புகளில் கையெழுத்திடாமல் கிடப்பில் போடுவதும், தாசில்தார் தரக்குறைவாக பேசுவதாக விஏஓக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பலமுறை எடுத்துக் கூறியும் பலனளிக்காத நிலையில், நேற்று இளையான்குடி தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.