திருச்சி,ஆக.23: மாநில அரசின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டங்கள் குறித்து பல இளைஞர்கள் அறிந்து கொள்ள முன்வருவதில்லை. பல இளைஞர்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேர்வு செய்யும் தொழில்குறித்த திட்ட மதிப்பீடு என்பது நம்பிக்கையூட்ட கூடியதாக இல்லை. எனவே தான் இந்த தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளது. இந்த தொழில் முனைவோர்கள் ஆவதற்கான திட்டங்கள் குறித்து திருச்சி மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது: மாநில அரசுகள் செயல்படுத்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (www.msmeonline.tn.gov.in/uyegp) மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் போதும், அதிகபட்சமாக 55 வயது வரை இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 8ம் வகுப்பு, அந்த மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதில் 10சதவீதம் அவர்களுடைய பங்களிப்பும், 25 சதவீதம் அரசின் மானியமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2021-22ம் ஆண்டில் 187 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கென மொத்தம் 62.2 கோடி கடனாக வழங்கப்பட்டு அதில் 15.55 கோடி அரசு மானியமாகவும், கடந்த 2022-23ம் ஆண்டில் 80 பேருக்கு 29.96 கோடி கடனாக வழங்கப்பட்டு அதில் 7.49 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (www.msmeonline.tn.gov.in/needs) கீழ் பயனடைய 21 வயதிற்கு மேல் 55 வயது வரை இருப்பவர்கள் பயனடையலாம். கல்வி தகுதி 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 10லட்சம் முதல் 5 கோடி வரை கடன் வழங்கப்படும். அதில் தொழில் முனைவோரின் பங்களிப்பு 10 சதவீதம், மெலும் திட்டமதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் அதிகப்பட்சம் ரூ. 75 லட்சம் வரை வழங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் கடந்த 2021-22ம் ஆண்டில் 31 பேருக்கு மொத்தம் 109.92 கோடி கடனாக வழங்கப்பட்டு, அதில் 27.48 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 30 பேருக்கு மொத்தம் 155.68 கோடியாக கடன் வழங்கப்பட்டு, அதில் 38.92 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சேவை தொழில்கள், உற்பத்தி தொழில்கள் என்று இரண்டு வகை உண்டு. அதில் சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையும், உற்பத்தி தொழிலுக்கு ரூ. 10 லட்சம் வரையும் கல்வித் தகுதி தேவையில்லை.
ஆனால் சேவை தொழிலில் ரூ.20 லட்சம் வரையும், உற்பத்தி தொழிலில் ரூ. 50 லட்சம் வரையும் பெற குறைபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி தேவை. இதில் வங்கி கடனாக 90-95 சதவீதம் வரை வழங்கப்படும். இதில் தொழில் முனைவோருக்கான முதலீடு 10சதவீதமும், மானியமாக பொதுப்பிரிவினர் நகர்புறம் 15 சதவீதம், கிராமப்புறம் 25 சதவீதம், மற்ற பிரிவினருக்கு நகர்புறம் 25 சதவீதம், கிராமபுறம் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2021-22 ம் ஆண்டில் 108 பேருக்கு 121.2 கோடி கடனாகவும், அதில் 30.3 கோடி அரசு மானியமாகவும் வழங்கி உள்ளது. கடந்த 2022-23ம் ஆண்டில் 197 பேருக்கு 199.48 கோடி கடனாகவும், 49.87 கோடி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இளைஞர்கள் இந்த திட்டங்கள் குறித்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் அல்லது மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். அதிகமான தொழில் முனைவோர்கள் உருவானால், நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் செலுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுய வேலைவாய்ப்பிற்கு வாய்ப்பு
தொழில் முனைவோர்களாக மாற விரும்பும் ஒவ்வொருவருக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்கள் சுயவேலைவாய்ப்பிற்கான சிறப்பான கடன் திட்டங்களை செயல்படுத்துகின்றனர். அதில் ஒன்றிய அரசின் திட்டங்களான பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் (www.pmfme.mofpi.gov.in), போன்றவையாகும்.