சிவகங்கை, ஜூலை 29: சிவகங்கையில் வட்டார வேளாண்மைத்துறை விரிவாக்க சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்(அங்கக பண்ணையம்) ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இப்பயிற்சியில் சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய வட்டாரங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அங்கக வேளாண்மையில் உள்ள சவால்கள், அங்கக வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அங்கக வேளாண்மை பொருட்கள் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மைகள் நன்மைகள் மற்றும் தீமைகள், விதையின் வகைகள் மற்றும் விவசாயத்தில் விதையின் பங்கு, விதைப்பண்ணை அமைத்தல், கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகள், சொட்டு நீர்ப்பாசனத்தின் அவசியம் அதன் நன்மைகள் மற்றும் திட்டம், மல்பெரி செடிகள் வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பாபு, குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் பயிற்றுநர்கள், வேளாண் அலுவலர்கள் பயிற்சியளித்தனர். சிவகங்கை வேளா ண்மை இணை இயக்குநர்(பொ) லட்சுமிபிரபா, துணை இயக்குநர் சண்முக ஜெயந்தி, உதவி இயக்குநர் வளர்மதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.