ராமநாதபுரம், செப். 21: கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச நெசவு பயிற்சி அளிக்கப்பட உள்ளது, இதுகுறித்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், இளைஞர்களுக்கு நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தை ரூ.1.17 கோடியில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிப்பதுடன், அவர்களை நெசவளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலை வாய்ப்பு வழங்குதல் மற்றும் தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய கைத்தறி தொழிலுக்கு பழமை மாறாமல் புத்துயிர் அளிக்கும் வகையில், கிராம பகுதிகளில் வசிக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு குறுகிய கால நெசவு பயிற்சி அளிக்க முதற்கட்டமாக 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சியில் சேருவோருக்கு தினந்ேதாறும் ரூ.250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கைத்தறிகளை இயக்கும் தகுதியுடன், எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இப்பயிற்சி தொடர்பான தகவல்களை பரமக்குடியில் மண்டபம் சாலை வசந்தபுரத்தில் உள்ள கைத்தறித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.