ஈரோடு, ஆக. 20: பங்களாப்புதூர் அடுத்துள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் பவித்ரா(26). இவர் திருப்பூரில் உள்ள கார்மெண்ட்ஸில் பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர்.
ஆனால் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி தட்டிக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி பவித்ரா வீட்டு வாசலில் திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். இது பற்றி பெற்றோர் கேட்ட போது பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டதாக கூறி உள்ளார்.
இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவித்ரா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பவித்ரா இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.