திருவண்ணாமலை, ஆக.30: திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜகிளி மகன் பிரபாகர்(30). கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். மேலும், கடந்த 22.01.2019 அன்று இளம்பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்துள்ளார். மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனால், அந்த இளம்பெண் கர்ப்பமடைந்தார்.
எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர் பிரபாகரிடம் கேட்டுள்ளார். அதற்கு, கருவை கலைத்து விடுமாறு மிரட்டியுள்ளார். ஆனால், இளம்பெண் மறுத்துவிட்டார். எனவே, தான் காதலிக்கவும் இல்லை, கருவுற்றதற்கு தான் காரணமும் இல்லை என்று ெதரிவித்த பிரபாகர், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஆரணி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வாலிபர் பிரபாகரை கைது செய்தனர்.
மேலும், இளம்பெண்ணின் கர்ப்பத்துக்கு பிரபாகர் தான் காரணம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில், அரசு சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட் சிறப்பு நீதிபதி சுஜாதா நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அதில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் பிரபாகருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்தார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபகாரை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.