ஊத்தங்கரை, அக். 19: ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கோழிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சேது. இவரது மனைவி சுருதி(26). நேற்று காலை 11 மணியளவில், சுருதி தனது டூவீலரில் நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த நபர், திடீரென சுருதியின் வாகனத்தை மறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிசெயினை பறித்து சென்றார். இதில் சுருதியின் கழுத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சுருதி கல்லாவி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் 5பவுன் தாலி செயின் பறித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.