பாலக்காடு, மே 15: கொடும்பு அருகே இளம்பெண்ணிடம் தரக்குறைவாக நடந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2024 ம் ஆண்டு 25 ம் தேதி பாலக்காடு மாவட்டம் கொடும்பு அருகே சைக்கிளில் வந்த இளம்பெண்ணை முதியவர் செந்தாமரை (59) என்பவர், ஆட்கள் யாரும் இல்லாத பகுதியில் வழி மறித்து தரக்குறைவாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர்கள், பாலக்காடு டவுன் சவுத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் கொடும்பு பகுதியை சேர்ந்த செந்தாமரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பாலக்காடு பாஸ்ட் டிராக் ஸ்பெஷல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் முதியவர் செந்தாமரைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பாஸ்ட் டிராக் போக்சோ நீதிமன்ற நீதிபதி சஞ்சு தீர்ப்பு வழங்கினார். அபராத தொகை கட்டவில்லையென்றால் மேலும், 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாலக்காடு டவுன் சவுத் எஸ்.ஐ சுரஜ் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.