Wednesday, June 18, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு இளம்பெண்களைக் குறி வைக்கும் பிரச்னை

இளம்பெண்களைக் குறி வைக்கும் பிரச்னை

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரில் தற்போது அறியப்படும் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரம்யா தமிழிலும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அரசியலில் பிஸியாக இருந்த ரம்யா, சமீபகாலமாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கர்நாடக தேர்தலின்போது ஓட்டுப் போடுவதற்கும் வரவில்லை. அவர் அரசியலுக்கு வர காரணமாக இருந்த அம்பரீஷின் இறுதி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதனால், ரம்யாவுக்கு என்ன ஆனது என்று பல்வேறு செய்திகள் மீடியாக்களில் வலம் வந்தது. இதற்கு பதிலாக, ரம்யா இன்ஸ்டாக்ராமில் கூறியிருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.தனது காலில் ஆஸ்டியோ ப்ளாஸ்டோமா என்ற எலும்பு சார்ந்த முள்ளந்தண்டு நோய் ஏற்பட்டுள்ளதாகவும், காலில் சிகிச்சை மேற்கொண்டு கட்டுப் போடப்பட்டிருப்பதாகவும் படத்துடன் குறிப்பிட்டுள்ளார். அதன் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். ‘கடந்த அக்டோபர் மாதம் முதல் நான் ஆஸ்டியோப்ளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். பாத எலும்புகளில் வலி கடுமையாக உள்ளது. அடுத்த சில வாரங்களில் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதை அலட்சியப்படுத்தினால் எலும்பு சார்ந்த புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். எனவே, உடனடியாக சிகிச்சை எடுத்து வருகிறேன். இதுபோன்ற ப்ரச்னை பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. இது எனக்கு மிகப்பெரிய பாடம். நான் அலட்சியமாக இருந்ததால் இந்த வகையான நோய்க்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, நீங்கள் (பெண்கள்) பாதுகாப்பாக இருங்கள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். என்னைப்போல அலட்சியமாக இருக்காதீர்கள்’’ என்று பெண்களுக்கு அறிவுரையும் கூறியிருக்கிறார்.ஆஸ்டியோ பிளாஸ்டோமா என்பது பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்களை அறிந்துகொள்வோம்… ஆஸ்டியோப்ளாஸ்டோமா(Osteoblastoma) என்பது எலும்புப்பகுதியில் உருவாகும் ஒருவகை கட்டி. இந்த கட்டி புற்றுநோயாக மாறும் அபாயம் கொண்டது. முதுகெலும்பு, கால்கள், கைகள் மற்றும் பாத எலும்புகளில் உருவாகக் கூடியது. வளர் இளம்பருவத்தினரை அதிகம் பாதிக்கக் கூடியது ஆஸ்டியோப்ளாஸ்டோமா. குறிப்பாக, 10 வயதில் இருந்து 30 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது. அதிலும் ஆண்களைக் காட்டிலும் இளம்பெண்களிடம் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனெனில், ஆஸ்டியோப்ளாஸ்டோமோ ஆரோக்கியமான எலும்பினை சிதைக்கும் வேலையை செய்துகொண்டே, வேகமாக வளரும் தன்மை கொண்டது. எனவே, அறுவைசிகிச்சை செய்து அகற்றுவதே பெரும்பாலும் இதற்கு சிகிச்சை முறையாக இருக்கிறது. உருவாகும் விதம்ஆஸ்டியோப்ளாஸ்டோமா மெதுவாகவே வளர்கிறது. எலும்புப்பகுதியில் Osteoid என்ற புதுவகை எலும்புத்துகள்களை உருவாக்குகிறது. இந்த ஆஸ்டியாய்டு ஆரோக்கியமான எலும்பினை சேதப்படுத்தி, அதனை சுற்றி ஒரு வளையம் போல உருவாகிறது. இந்த ஆஸ்டியாய்டு துகள் எலும்பை விட பலவீனமானதாகவே இருக்கும். இந்த பகுதியைச் சுற்றியே கட்டிகள் உருவாகிறது. இந்த பகுதி உடையும் தன்மையுடையதாகவும் மாறுகிறது. ஆஸ்டியோப்ளாஸ்டாமா உருவாகும் காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.அறிகுறிகள் ஆஸ்டியோப்ளாஸ்டாமா மெதுவாக வளர்கிறது என்பதால் உடனடியாக அறிகுறிகளை உணர முடிவதில்லை. பெரும்பாலும் சராசரியாக 2 ஆண்டுகளாகிவிடுகிறது. பெரும்பாலும் கால்களிலும், தோள் எலும்புப்பகுதியிலும் மெலிதான வலியாகவோ அல்லது வீக்கமாகவோ அறிகுறியாகக் காட்டும். இதை வைத்து எச்சரிக்கையாகிவிட வேண்டியதுதான். முதுகெலும்பில் உருவாகும் ஆஸ்டியோப்ளாஸ்டோமா முதுகுவலியாகக் காட்டும். முதுகெலும்பில் உருவாகும் ஆஸ்டியோப்ளாஸ்டோமா கட்டியானது நரம்புகளை அழுத்தும் என்பதால் கால்களில் வலியாகவோ அல்லது மரத்துப்போன தன்மையினையோ அல்லது பலவீனமாகவோ உணர்வார்கள். முதுகெலும்பில் உருவாகும் ஆஸ்டியோப்ளாஸ்டோமாவால் தசைகள் இழுத்துக் கொள்ளுதல் உருவாகும். முதுகு வளையும் இந்த Scoliosis பிரச்னையை எளிதாகக் குணப்படுத்திவிட முடியும் என்பது ஆறுதலான செய்தி. இதனை நெளிமுதுகு என்றும் குறிப்பிடுவார்கள்.உடலில் வலி இருக்கிறது என்று சொன்னால் உடல் பரிசோதனையில் மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார். எலும்பு பகுதி மென்மையாவது, வலி பரவுவது போன்ற விஷயங்களை வைத்து கண்டுபிடிப்பார். தசைகளைப் பரிசோதனை செய்வதன் மூலமும் ஆஸ்டியோப்ளாஸ்டோமாவை கண்டுபிடிக்க முடியும். எக்ஸ் ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ மூலம் அடர்த்தியை கண்டுபிடிப்பதன் மூலம் ஆஸ்டியோப்ளாஸ்டோமாவை தெரிந்துகொள்ள முடியும். ஸ்கேன் பரிசோதனை முடிவில் திசுக்கள் மென்மையாக இருப்பதாக கண்டறியப்பட்டால், Cross-sectional images என்கிற குறுக்கு வெட்டு பரிசோதனை செய்ய வேண்டும். சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகள் துல்லியமாக தெரிய வந்துவிட்டால், அந்த கட்டியின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.கட்டியின் தன்மையை பயாப்ஸி மூலம் உறுதிப்படுத்திய பிறகு, கட்டியின் ஒரு திசுப்பகுதியை மைக்ராஸ்கோப் உதவியுடன் பரிசோதிக்க வேண்டும். மரத்துப் போன பகுதியில் அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டு உங்கள் மருத்துவரால் ஊசி மூலம் எடுக்கப்படும். இதுவும் ஒரு சிறிய வகை அறுவை சிகிச்சையே. ஆஸ்டியோப்ளாஸ்டோமாவின் இன்னொரு வடிவம்ஆஸ்டியோப்ளாஸ்டோமாவைப் போலவே காணப்படும் இன்னொரு வகை எலும்பு கட்டி ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா (Osteoid osteoma). இது இளைய தலைமுறை ஆண்களிடம் அதிகம் காணப்படும் கட்டி வகையாக இருக்கிறது. ஆஸ்டியோ ப்ளாஸ்டோமோவை விட சிறியதாக இருக்கும் இந்த ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா. இது மேலும் வளராது. இது இரவு நேரங்களில் அதிகம் வலியைத் தரக்கூடியது. ஸ்டீராய்டு அல்லாத மருந்துகளினால்(NSAIDs) வலி நிவாரணம் கிடைக்கும்.அதே நேரத்தில் ஆஸ்டியோப்ளாஸ்டோமாஸ் இரவில் வலிக்காது. NSAIDs மருந்துகளினால் பலனும் கிடைக்காது. ஆஸ்டியோப்ளாஸ்டோமா வளரக் கூடியது என்பதால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியிருக்கும். ஆஸ்டியாய்டு ஆஸ்டியோமா வளராது என்பதால் அறுவை சிகிச்சை தேவையிருக்காது. ;சிகிச்சைகள்Curettage and Bone Grafting சிகிச்சை முறை இதில் உண்டு. அதில் பாதிக்கப்பட்ட எலும்புப்பகுதியை அகற்றிவிட்டு, அதே பகுதியில் எலும்பினை வைத்து நிரப்பும் முறை இது. இது எலும்பு தானம் பெற்றவரிடம் இருந்தும் நிரப்பப்படும். இது Allograft எனப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் உடலின் வேறு ஒரு பகுதியில் இருந்து எலும்புப்பகுதியை நிரப்பும் முறைக்கு Autograft என்று பெயர். Bone cement mixture மூலமாகவும் எலும்பினை நிரப்பலாம். தோள் பகுதி, கால் பகுதி ஆஸ்டியோ ப்ளாஸ்டோமாவுக்கு செய்யப்படும் சிகிச்சை எளிதானது.ஆனால், முதுகெலும்பில் உருவாகியிருக்கும் ஆஸ்டியோ ப்ளாஸ்டாமாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க சற்று கூடுதல் கவனம் தேவைப்படும். ஒரு சங்கிலித்தொடராக இருக்கும் எலும்புப்பகுதியில் குறிப்பிட்ட பகுதியை அகற்றும்போது, அதன் சப்போர்ட் பாதிப்பு அடையும். எனவே, மீதியுள்ள பகுதியை வெல்டிங் முறையிலேயே (Welding process) மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கும். ரேடியேஷன் தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை அதிகம் பரிந்துரைக்கப்படுவதில்லை. முதுகெலும்பில் ஆஸ்டியோப்ளாஸ்டோமா ஏற்பட்டு, அதனை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் அகற்ற முடியாத பட்சத்தில் ரேடியேஷன் தெரபி பரிந்துரைக்கப்படும். சிகிச்சைக்குப் பிறகு குணமாவதும், அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதும் கட்டியின் அளவைப் பொறுத்தும், அது எந்த முறையில் அகற்றப்படுகிறது என்பதைப் பொறுத்தும் அமையும். அதேபோல், உங்கள் மருத்துவர் மறுவாழ்வுக்கு பரிந்துரைப்பார்! தொகுப்பு: ஜி.ஸ்ரீவித்யா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi